Published : 01 Mar 2025 05:20 PM
Last Updated : 01 Mar 2025 05:20 PM

‘புது வெள்ளை மழை...’ - ராஜஸ்தானில் திடீர் வானிலை மாற்றமும், வைரல் பகிர்வுகளும்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வானிலை பெரும் மாற்றம் காண்டுள்ளது. அங்குள்ள சுரு மற்றும் சர்தார்சஹர் முதலான பகுதிகளில் கனமழை மற்றும் பனிக்கட்டி மழை பெய்து வருகிறது. அங்கிருக்கும் தெருக்களில் பனிக்கட்டிகள் ஒரு போர்வை போல விரிந்து கிடக்கும் படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

இந்திய வனத்துறை அதிகாரியான (ஐஎஃப்எஸ்) பர்வீன் கேசவன் இதுபோன்றதொரு வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை பகிர்ந்துள்ளார். அதில், ராஜஸ்தானின் சுருவில் உள்ள தெருக்கள், வீடுகள், திறந்தவெளிகள் பனிக்கட்டிகளால் வெள்ளைப் போர்வை போல மூடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து, "இது காஷ்மீர் இல்லை... ராஜஸ்தானின் சுரு. கோடையில் இங்கு 50 டிகிரி வரை வெப்பம் தகிக்கும். எவ்வளவு கடுமையான வானிலை" என்று தெரிவித்துள்ளார்.

விவசாயி ஒருவர் தனது வீட்டு வாசலில் உள்ள பனியை அகற்றும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ள அவர், "வானிலிருந்து பொழிந்த பனிக்கட்டி மழையைப் பாருங்கள். இயற்கையின் இந்த மாறுபாடுகளை எதிர்கொள்ளும் விவசாயிகளின் நிலையை என் மனம் எண்ணிப் பார்க்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த திடீர் கனமழை மற்றும் பனிக்கட்டி மழை பெய்யும் வானிலை மாற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர், சுரு, கோட்புட்லி - பெஹ்ரோர், பிகானேர் மற்றும் ஆல்வார் பகுதிகளில் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஷேஹாவதி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி வரை குறைந்துள்ளது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை முதல் நிலைமை மாறும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், ராஜஸ்தான் மாநிலத்தில் மார்ச் மாதம் முழுவதும் கடுமையான வெப்பம் உணரப்படும். மார்ச் முதல் மே வரை வெப்பச்சலனம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x