Published : 01 Mar 2025 04:26 PM
Last Updated : 01 Mar 2025 04:26 PM
புதுடெல்லி: திமுகவின் இந்தி எதிர்ப்பு விவகாரத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டுமென பாஜக தலைமையிலான மத்திய ஆட்சியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அணில் துபே வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து உ.பி.,யின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அனில் துபே கூறியதாவது: இண்டியா கூட்டணியின் முக்கிய அங்கமான சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ், திமுகவின் புதிய கல்விக் கொள்கை 2020-க்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எதிர்ப்பதன் மூலம் திமுக அற்ப அரசியலில் ஈடுபட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது அரசும் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் பன்மொழி பேசுவதை ஆதரிப்பதாகக் கூறுகிறார், ஆனால் மாநிலத்தில் இந்தி கட்டாயமாக்குவது அவரது அரசாங்கத்திற்கு ஏற்கத்தக்கதல்ல என்றும் எதிர்க்கிறார்.1968 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் காலத்தில், மும்மொழி சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் கீழ் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு பிராந்திய மொழி அனைத்து மாநிலங்களிலும் கற்பிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது
அந்த நேரத்தில் கூட, இந்த மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவில்லை. தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. இக்கொள்கை 1986 இல் இதர மாநிலங்களால் ஏற்கப்பட்டு, தமிழ்நாடு அரசு மட்டும் அதை எதிர்த்தது. மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு தேசிய ஒற்றுமையை எதிர்க்கிறது. 2020 ஆம் ஆண்டில், ஒரு புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு பிராந்திய மொழி என்ற கொள்கை மாநிலத்தில் செயல்படுத்தப்பட வேண்டும். எந்த மொழியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படாது என்றும் கூறப்பட்டது.
தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்துடன், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை ஊக்குவிக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் தேசிய ஒற்றுமையை மேலும் சக்திவாய்ந்ததாகவும் வலுவாகவும் மாற்ற முடியும். ஆனால், தமிழக முதல்வரும் அவரது அரசாங்கமும் அதை எதிர்க்கின்றன. மொழி பற்றிய குறுகிய சிந்தனைக்கு மேல் உயராமல், தமிழக முதல்வரும், அவரது அமைச்சர்களும் அரசியல் நலன்கள் காரணமாக மும்மொழிக் கொள்கையை எதிர்க்கின்றனர்.
மேலும், அவர்கள் அதை எதிர்க்கும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். 1918 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின் போது, தேசப்பிதா மகாத்மா காந்தி தமிழகத்தில் இந்தி பிரச்சார சபையை நிறுவினார். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது அரசியலின் நிறத்தையும் கல்வி நிலையையும் மாற்றும் எனக் கருதப்படுகிறது. இந்தி கற்பிப்பதை நிறுத்துவதன் மூலம் தமிழக அரசு தேசிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துகிறது.
புதிய கல்விக் கொள்கை இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பிராந்திய இந்திய மொழிகளைக் காப்பாற்றுவதற்காகச் செயல்படுகிறது, ஆனால் இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்களான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இது குறித்து பேசாமல் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
இதே பிரச்சினையில், ராஷ்ட்ரிய லோக் தளத்தின் மற்றொரு தேசியச் செயலாளர் அனுபம் மிஷ்ரா கூறுகையில், ’புதிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை, மொழிப்பிரச்சினையைத் தூண்டுவதன் மூலம் ஸ்டாலின் தனது அரசியல் லட்சியங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.
நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்து ஸ்டாலினுக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்தியாவில், 52 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தி பேசுகிறார்கள். இந்த வகையில், மொழி வாரியாக, இந்தி என்பது நம் நாட்டின் ஆன்மா என்று அழைக்கப்படலாம். இந்தி நம் நாட்டில் அதிகம் எழுதப்பட்ட, பேசப்பட்ட மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியாகும்.’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT