Published : 01 Mar 2025 03:39 PM
Last Updated : 01 Mar 2025 03:39 PM
புதுடெல்லி: இந்திய தயாரிப்புகள் உலகம் முழுவதும் சென்று அதன் இருப்பை உணரச் செய்வதால், தனது “உள்ளூர் பொருட்களுக்கான குரல்” பிரச்சாரம் பலனளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நியூஸ்எக்ஸ் வேர்ல்ட் எனும் உலக தொலைக்காட்சியின் தொடக்கவிழாவை முன்னிட்டு நடைபெற்ற NXT மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "உலகம் பல பத்தாண்டுகளாக இந்தியாவை அதன் பின் அலுவலகமாகப் பார்த்தது. ஆனால் இப்போது நாடு உலகின் தொழிற்சாலையாக உருவெடுத்து வருகிறது. இப்போது, இந்தியா தொழிலாளர் சக்தி அல்ல, மாறாக ஒரு "உலக சக்தி".
குறைக்கடத்திகள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவின் சூப்பர் உணவுகளான மக்கானா, தினை, ஆயுஷ் பொருட்கள் மற்றும் யோகா ஆகியவை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவும் ஒரு பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக மாறியுள்ளது. மேலும், இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவை எந்த நிறமும் இல்லாமல், அது இருப்பதைப் போலவே வழங்க வேண்டும். அதற்கு எந்த ஒப்பனையும் தேவையில்லை. நாட்டின் உண்மையான சாதனைகள் உலகைச் சென்றடைய வேண்டும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தியாவின் புதிய உலகளாவிய செய்தி சேனல் நாட்டின் சாதனைகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன்.
21 ஆம் நூற்றாண்டில் இந்தியா தொடர்ந்து நேர்மறையான செய்திகளை உருவாக்கி வருவதை உலகம் பார்த்து வருகிறது. இந்தியா இப்போது பல உலகளாவிய முயற்சிகளுக்கு தலைமை தாங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற AI உச்சிமாநாடு, இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற G20 உச்சிமாநாடு போன்றவை இதற்கு உதாரணங்கள்.
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளா, இந்தியாவின் ஒழுங்கமைக்கும் திறன்களையும் புதுமைகளையும் எடுத்துக்காட்டுகிறது.
எனது அரசாங்கம் பல காலாவதியான சட்டங்களை ரத்து செய்திருக்கிறது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் நடனமாடுவதை குற்றமாகக் கருதும் ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட சட்டம், எனது ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்படும் வரை அமலில் இருந்தது.
“லுட்யன்ஸ் ஜமாத்” மற்றும் “பொதுநல மனு ஒப்பந்ததாரர்கள்” போன்றோர், எல்லாவற்றுக்கும் நீதிமன்றங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால், இத்தகைய சட்டம் குறித்து அவர்கள் மவுனம் காத்தனர். அப்போது அவர்கள் சுதந்திரம் பற்றி யோசிக்கவில்லை.” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT