Published : 01 Mar 2025 04:23 AM
Last Updated : 01 Mar 2025 04:23 AM

நீதிமன்ற உத்தரவை மதிக்காத தொழிலாளர்கள்: செங்கல் சூளையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட பெண் உரிமையாளர்

திருவனந்தபுரம்: நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செங்கல் சூளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் மதிக்காததால் தான் நடத்தி வந்த செங்கல் சூளையை மூடும் நிலைமைக்கு பெண் உரிமையாளர் தள்ளப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் திருபுரம் அருகிலுள்ள பழையகடா பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பகுமாரி (57). இவர் தனது கணவர் தங்கப்பனுடன் சேர்ந்து பராசாலா பகுதியில் செங்கல் சூளையை நடத்தி வந்தார். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தங்கப்பன்.

இந்நிலையில் செங்கல் சூளையில் பணியாற்றும் செங்கல்லை தலையில் சுமக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கும், உரிமையாளர் புஷ்பகுமாரிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. கூலியை உயர்த்தித் தருமாறு தொழிலாளர்கள் போராடி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியூ தொழிற்சங்கமும், காங்கிரஸின் ஐஎன்டியூடிசி தொழிற்சங்கமும் இருந்தன. சுமார் 6 ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.

இதுகுறித்து புஷ்பகுமாரி கூறியதாவது: எதிர்பார்க்காத அளவுக்கு கூலியை உயர்த்தித் தருமாறு தொழிலாளர்கள் கேட்கின்றனர். 1,000 செங்கற்களை ஏற்றுவதற்கு ரூ.480 தருகிறோம். ஆனால் அவர்கள் ரூ.800-ம், அதற்கும் அதிகமாகவும் கூலி கேட்கின்றனர். தராவிட்டால் கொலை செய்வோம் என்று மிரட்டுகின்றனர். இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

அப்போது, செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு தருமாறு மாநில போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் போலீஸார் முன்னிலையிலேயே நீதிமன்ற உத்தரவை, தொழிலாளர்கள் கிழித்துப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், சூளையில் வேலை செய்யும் ஊழியர்களையும் அவர்கள் பணியாற்ற விடுவதில்லை. இதுதொடர்பாக போலீஸாரிடம் கேட்டால், செங்கல் சூளை நடக்க வேண்டுமானால், தொழிலாளர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள் என்று சொல்கின்றனர்.

தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருந்தனர். தொழிற்சங்கத்தினருடன் இணைந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொந்தரவு செய்து கொண்டே இருந்ததால் நிறுவனங்களுக்கு செங்கல் விநியோகம் செய்யும் பணிகள் தடைபட்டு ஆர்டர்கள் ரத்தாயின.

இதனால் எங்களுக்கு ஏராளமான நஷ்டம் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு சாதகமாக இருந்தாலும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடும், தொழிற்சங்கத்தின் ஆதரவோடும் எங்களை மிரட்டுகின்றனர். எனவே, எனது செங்கல் சூளையை மூடும் நிலைக்கு வந்துவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தொழிலாளர் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரியிடம் கேட்டபோது, “நாங்கள் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தினரையும் எச்சரித்து அனுப்பியுள்ளோம். விரைவில் பிரச்சினை தீரும்" என்றார். இதுதொடர்பாக போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தப் பிரச்சினையை விரைவில் நாங்கள் சரி செய்து விடுவோம்" என்றார். ஆனாலும் பிரச்சினை இதுவரை தீரவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x