Published : 28 Feb 2025 12:34 PM
Last Updated : 28 Feb 2025 12:34 PM

புனே பேருந்து நிலைய பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீஸ் கைது செய்தது எப்படி?

புனே: மகாராஷ்டிராவின் புனே நகர் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட தத்தாத்ரே ராம்தாஸ் கடேவை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தத்தாத்ரே கடே, புனே மாவட்டம், ஷிரூர் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த நிலையில் புனே குற்றப்பிரிவு போலீஸார் அவரைக் கைது செய்தனர். புனே நகர துணை ஆணையர் ஸ்மார்டனா பாட்டீல் இதனை தெரிவித்தார். முன்னதாக வியாழக்கிழமை துணை ஆணையர் கூறுகையில், "இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர், முகக்கவசம் அணிந்துள்ளார். சிசிடிவி கேமராக்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து மர்ம நபரை கண்டுபிடித்துவிட்டோம்.

ராம்தாஸ் கடே (36) என்ற அந்த நபர் மீது திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நடத்துநர் போன்று அவர் நடித்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் விரைவில் கைது செய்யப்படுவார். அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம்" எனக் கூறியிருந்தார்.

பழைய குற்ற வழக்கு ஒன்றில் 2019-ம் ஆண்டு தத்தாத்ரே கடே ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இதனிடையே புனே பேருந்து பணிமனை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் ஷிரூர் பகுதியில் உள்ள குணாட் கிராமத்தில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர். அங்குள்ள கரும்பு வயல்களில் ட்ரோன்கள், மோப்ப நாய் குழுக்கள் உதவியுடன், 100-க்கும் அதிகமான போலீஸார் இந்தத் தேடுதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடே கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன?: கடந்த 25-ம் தேதி அதிகாலையில் மகாராஷ்டிராவின் புனே நகர் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது இளம்பெண், சதாரா செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது இளம்பெண்ணை அணுகிய மர்ம நபர், எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று விசாரித்துள்ளார். அந்த பெண், சதாரா மாவட்டத்தின் பால்தானுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். பால்தான் செல்லும் பேருந்து மற்றொரு பிளாட்பாரத்தில் நிற்பதாக கூறிய மர்ம நபர், இளம்பெண்ணை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

ஆள் நடமாட்டம் இல்லாத பிளாட்பாரத்தில் நின்றிருந்த குளிர்சாதன பேருந்தில் இளம்பெண்ணை, மர்ம நபர் ஏறச் சென்னார். அந்த பேருந்தில் இளம்பெண் ஏறி அமர்ந்ததும் பின்னால் சென்ற மர்ம நபர், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x