Published : 28 Feb 2025 05:14 AM
Last Updated : 28 Feb 2025 05:14 AM

பிரதமர் மோடியின் கல்வி சான்று விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி சான்று விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிஏ, எம்ஏ பட்டப் படிப்பு சான்றிதழ் குறித்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டில் கேள்வி எழுப்பினார். அப்போதைய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடியின் பிஏ, எம்ஏ பட்டப்படிப்பு சான்றிதழ்களை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதனிடையே ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் பிஏ கல்வி சான்றிதழை கோரி டெல்லி பல்கலைக்கழகத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் சர்மா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த அப்போதைய தகவல் ஆணையர் ஆச்சார்யலு, பிரதமர் மோடியின் பிஏ கல்வி சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் டெல்லி பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தகவல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் கூறும்போது, “பிரதமர் மோடியின் பிஏ பட்டப் படிப்பு சான்றிதழை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயார். ஆனால் பொது அரங்கில் வெளியிட முடியாது" என்று தெரிவித்தார்.

இறுதியில் நீதிபதி சச்சின் தத்தா கூறும்போது, “விசாரணை நிறைவடைந்துவிட்டது. தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது" என்ற தெரிவித்தார்.

2023-ம் ஆண்டு தீர்ப்பு: பிரதமர் மோடி குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்ஏ பட்டம் பெற்றுள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது. “பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ்களை பிரதமர் அலுவலகம், குஜராத், டெல்லி பல்கலைக்கழகங்கள் வழங்க தேவையில்லை" என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு கல்வி சான்றிதழை கோரிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x