Published : 28 Feb 2025 04:09 AM
Last Updated : 28 Feb 2025 04:09 AM
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது இணைய பக்கத்தில் நேற்று வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது:
மகா கும்ப மேளாவில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையைவிட இருமடங்கு அதிக மக்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். பிரயாக்ராஜுக்கு நேரில் வர முடியாதவர்கள் உணர்வுபூர்வமாக இணைந்திருந்தனர். 140 கோடி இந்தியர்களும் மகா கும்பமேளாவை கொண்டாடினர்.
பல ஆயிரம் ஆண்டுகளாக கும்பமேளா நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தி வருகிறது. ஏழை - பணக்காரர், இளையோர் - முதியோர், வடக்கு - தெற்கு, சாதி வேறுபாடுகள் இன்றி நாடு முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள், மகா கும்பமேளாவில் கூடினர். ஒரே விழாவில்140 கோடி மக்களின் நம்பிக்கை ஒன்றாக வெளிப்பட்டது. ஒரே இந்தியா, உன்னத இந்தியாவை நேரில் காண முடிந்தது. இதே உத்வேகத்துடன் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாட்டில் புதிய விடியல் பிறந்திருக்கிறது. நாம் புதிய எதிர்காலத்துக்கு தயாராகிவிட்டோம்.
பல்வேறு பக்தி இயக்கங்கள் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தின. சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோர் ஒற்றுமையின் வலிமையை எடுத்துரைத்தனர். சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி மக்களை ஒன்றுபடுத்தி, ஒற்றுமையின் வலிமையை வெளிப்படுத்தினார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. அந்த மாநிலத்தை சேர்ந்த எம்பி என்ற வகையில் நான் பெருமைப்படுகிறேன். உலகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் மற்றும் திட்டமிடல், கொள்கைகளை வகுக்கும் நிபுணர்களின் ஆய்வுக் களமாக மகா கும்பமேளா மாறியிருக்கிறது,
பிரயாக்ராஜில் தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், படகோட்டிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பக்தர்களுக்கு தன்னலமின்றி சேவையாற்றினர். பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் பிரயாக்ராஜ் நகர மக்கள், பக்தர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தனர். இந்த நேரத்தில் பிரயாக்ராஜ் மக்களுக்கும், ஒட்டுமொத்த உத்தர பிரதேச மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மகா கும்பமேளா நிறைவடைந்தது. ஒற்றுமையின் மகா யாகம் நிறைவடைந்தது. அடுத்து 12ஜோதி லிங்கங்களில் முதலாவது ஜோதி லிங்கமான ஸ்ரீ சோமநாதரை தரிசிக்க உள்ளேன். அப்போது இந்தியர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வேன். நாட்டின் ஒற்றுமை நீரோட்டம் தொடர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் யோகி பாராட்டு: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி ஒற்றுமை, சமத்துவம், நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மகா கும்பமேளா வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு, தூய்மை, நிர்வாகத் திறனில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டு உள்ளன. 45 நாட்களில் 66 கோடிக்கும் மேற்பட்ட பத்தர்கள், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.
உலகம் ஒரே குடும்பம் என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. இதற்கு உதாரணமாக மகா கும்பமேளா நடத்தப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல், நல்லாசி எங்களுக்கு உத்வேகத்தை அளித்தது. இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பிரயாக்ராஜ் சென்றார். அங்கு தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து அவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார். கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT