Published : 27 Feb 2025 06:57 AM
Last Updated : 27 Feb 2025 06:57 AM
லக்னோ: குடிபோதையில் மணமகளுக்குப் பதிலாக மணமகளின் தோழனுக்கு மாலையை மணமகன் அணிவித்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் அண்மையில் நடைபெற்ற திருமணம் தொடர்பான வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உ.பி. மாநிலம் கியோல்டியா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நவ்க்வா பகவந்த்பூர் பகுதியில் இந்த திருமணம் கடந்த 22-ம் தேதி நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான அந்த வீடியோவில், திருமணத்தின்போது மேடையில் மணமகள் ராதா அமர்ந்திருக்க, மணமகன் ரவீந்திரகுமார் (26) தள்ளாடியபடி மேடைக்கு வருகிறார். இதனால் ராதாவின் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, குடிபோதையில் இருந்த அந்த மணமகன் ரவீந்திரகுமார், மணப்பெண் ராதாவுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் நண்பருக்கு மாலையை அணிவித்தார்.
இதனால், கோபமடைந்த மணப்பெண் ராதா, ரவீந்திரகுமாரை திருமணம் செய்யமாட்டேன் என்று கத்திக் கூச்சலிட்டார். இதனால் மணமேடையில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ராதாவின் குடும்பத்தினர், அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், குடிகார மணமகனை திருமணம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
மேலும், போலீஸ் நிலையத்திலும் ராதா புகார் அளித்தார். மணமகளின் புகாரின் பேரில், மணமகன் ரவீந்திரகுமாரின் குடும்பத்தினர் 5 பேர் மீது வரதட்சனை துன்புறுத்தல், பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் கியோல்டியா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தத் திருமணத்துக்காக ராதாவின் குடும்பத்தார் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்திருப்பதாவும், அதை ரவீந்திர குமார் குடும்பத்தார் திருப்பித் தரவேண்டும் என்றும் ராதாவின் அண்ணன் ஓம்கார் வர்மா தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT