Last Updated : 26 Feb, 2025 03:39 PM

 

Published : 26 Feb 2025 03:39 PM
Last Updated : 26 Feb 2025 03:39 PM

பாட்னாவில் அகத்தியர் குறித்த கருத்தரங்கு: ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பங்கேற்பு

ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் | கோப்புப்படம்

புதுடெல்லி: பிஹார் மாநிலம் பாட்னாவில் அகத்தியர் குறித்த ஒருநாள் கருத்தரங்கு இன்று (பிப்.26) நடைபெறுகிறது. காசி தமிழ் சங்கமத்தை ஒட்டி நடைபெறும் இந்நிகழ்வில், பிஹார் மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பங்கேற்கிறார்.

வட மற்றும் தென் மாநில மக்களை ஒன்றிணைக்க உத்தரப் பிரதேச மாநிலம் வாராணாசியில், காசி தமிழ் சங்கமங்கள் 2022-ம் ஆண்டு முதல் நடைபெறுகின்றன. இதன் முதல் சங்கமத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதன் மூன்றாவது ஆண்டாக கேடிஎஸ் 3.0 பிப்ரவரி 14-ல் துவங்கி பிப்ரவரி 24-ல் முடிந்தது. இதன் கருப்பொருளாக இடம்பெற்றிருந்த அகத்தியர் குறித்து, நாடு முழுவதும் கருத்தரங்குகள் நடத்த வேண்டுமென்று மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

இதையொட்டி, பிஹார் தலைநகர் பாட்னாவில் இன்று (பிப். 26) அகத்தியர் குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த ஒருநாள் கருத்தரங்கில் ‘ராமாயணத்தில் அகத்திய முனிவரின் பங்கு மற்றும் பிஹாரின் நிலப்பரப்பில் அதன் செல்வாக்கு’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இந்நிகழ்வின் முக்கிய விருந்தினராக பிஹார் மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் கலந்து கொண்டு நிகழ்வைத் துவக்கி வைக்கிறார். அவருடன், விஷ்வ இந்து பரிஷத்தின் சர்வதேசப் பிரிவின் தலைவர் ஆர்.என்.சிங் மற்றும் ஆரியபட்டா அறிவு பல்கலைகழகம் மற்றும் பாடலிபுத்ரா பல்கலைகழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் சரத்குமார் யாதவ் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர்.

மத்தியக் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்படும் இக்கருத்தரங்கானது பாட்னாவின் சிமேஜ் குழுமத்தின் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் மைய வளாகத்தில் நடைபெறுகிறது. இதன்மூலம், அகத்திதிய முனிவர், ராமாயணம், சித்த மருத்துவ மரபு, வடக்கு-தெற்கு உறவுகள் ஆகியவற்றின் பன்முக அம்சங்கள் புதிய தலைமுறை இளைஞர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x