Published : 26 Feb 2025 04:09 AM
Last Updated : 26 Feb 2025 04:09 AM
இந்தி பேசும் வட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது. இப்பட்டியலில், உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, உத்தராகண்ட், இமாச்சால பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றின் அரசு பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை வரை மும்மொழி பின்பற்றப்படுகிறது. ஆங்கிலமும், இந்தியும் கட்டாயப் பாடங்களாக உள்ளன.
புதிய கல்விக் கொள்கை 2020-ல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளை மூன்றாவதாக போதிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பெரும்பாலான அரசு பள்ளிகளில் மூன்றாவது மொழியாக உருது அல்லது சம்ஸ்கிருதம் மட்டுமே போதிக்கப்படுகின்றன. இவற்றில் உருதுவை முஸ்லிம்களும், சம்ஸ்கிருதத்தை முஸ்லிம் அல்லாதவர்களும் பயில்கின்றனர்.
டெல்லி, ஹரியானாவின் அண்டை மாநிலமாக பஞ்சாப் இருப்பதால் அதன் பஞ்சாபி மொழி சேர்க்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகராஷ்டிராவின் அரசு பள்ளிகளில் உருது மற்றும் சம்ஸ்கிருதத்துடன் தென்னிந்திய மொழிகளும் போதிக்கப்படுகின்றன. இதில், தமிழ், கன்னடம், மராத்தி, மலையாளம் இடம்பெற்றுள்ளன.
கேரளா, மகராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சில தென்னிந்திய மொழிவழிக் கல்வி பள்ளிகளும் உண்டு.
வடமாநிலங்களின் மூன்றாவது மொழியில் மாணவர்கள் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றாலும் அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்லும் வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை. இதற்காக, உருது அல்லது சம்ஸ்கிருதத்தில் தேர்ச்சி பெறாதவர்களின் மதிப்பெண்கள், இந்தியுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. இவ்வாறு பெரும்பாலான வட மாநிலங்களில் மூன்றாவது மொழித் தேர்வை பெயரளவில் நடத்துவதாகப் புகார் உள்ளது. இப்புகாருக்கு காரணம் அந்த அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையே.
வட இந்தியாவின் பெரும்பாலான அரசு பள்ளிகளில் இந்தி மொழி ஆசிரியரே சம்ஸ்கிருத பாடத்தையும் நடத்துகிறார். ஏனெனில், சம்ஸ்கிருதம் இந்திக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. உருது மொழி ஆசிரியர்களும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் இல்லை. இதற்காக, உருது பாடம் போதிப்பதற்கு அருகிலுள்ள முஸ்லிம் மதரஸாக்களுக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மூன்றாவது மொழிக்கான ஆசிரியர்களை நியமிக்க நிதி ஒதுக்கப்படுவதில்லை. இதையே காரணமாக்கி பல மாநில அரசுகள் மூன்றாவது மொழிக்கான ஆசிரியர்களை நியமிக்காத நிலையும் உள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறும்போது, ‘‘என்இபியில் இதர மொழிகளுக்கு வாய்ப்பு இருந்தும் வட மாநில அரசுகளும், மாணவர்களும் இந்தி, சம்ஸ்கிருதத்தையே விரும்புகின்றனர். மத்திய அரசு சமக்கிரு சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் பள்ளிகளின் அனைத்து செலவுகளுக்கும் நிதி வழங்குகிறது. இதில் ஆசிரியர்களை நியமிக்க ஏற்படும் நிதிச் சிக்கல்களை தெரிவித்தால் அதற்கான தீர்வு காணப்படும்’’ என்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுவதில்லை. மூன்றாவது மொழியின் பெயரில் இந்தி திணிக்கப்படுகிறது என்ற சந்தேகமே இதற்கு காரணம் எனக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT