Published : 26 Feb 2025 03:26 AM
Last Updated : 26 Feb 2025 03:26 AM
புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு சட்டப்பேரவையில் தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்களை சபாநாயகர் விஜேந்தர் குப்தா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
டெல்லி சட்டப்பேரவை மூன்று நாள் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று முன்தினம், சபாநாயகர் விஜேந்தர் குப்தா முன்னிலையில் ஆளும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எம்எல்ஏவாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
2-வது நாளான நேற்று, துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உரையுடன் அவை தொடங்கியது. அப்போது, முந்தைய ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் குறித்த சிஏஜி அறிக்கையை ஆளும் பாஜக அரசு சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபை காவலாளிகளுக்கு சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார்.
மேலும், சபையில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ஆதிஷி உட்பட 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை அவையிலிருந்து ஒரு நாள் முழுக்க சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பாஜக அரசு வெளியிட்ட அந்த சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுபான விற்பனையில் பலவீனமான கொள்கை கட்டமைப்பு மற்றும் மோசமான செயல்படுத்தல் காரணமாக ஆம் ஆத்மி கட்சி 2021-22 காலட்டத்தில் ரூ.2,000 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உரிமம் வழங்கும் நடைமுறையில் பல்வேறு விதிமீறல்கள் செய்யப்பட்டுள்ளன. அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை வேண்டுமென்றே புறக்கணிப்பு செய்துள்ளார்.
விதிமுறைகளை மீறிய நகராட்சி வார்டுகளில் அங்கரிக்கப்படாத மதுபான கடைகளால் அரசுக்கு ரூ.941.53 கோடி வருவாய் இழப்பும், மறு டெண்டர் செய்யப்படாத சரண்டர் உரிமங்கள் மூலம் ரூ.890.15 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முதல்வர் அறையில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர், பகத் சிங்கின் புகைப்படங்களை பாஜக அரசு அகற்றிவிட்டதாக கூறி ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் படங்கள் முதல்வர் அமரும் இருக்கையின் பின்பகுதியில் இருந்து மாற்றபட்டு பக்கவாட்டு சுவரில் மாட்டப்பட்டுள்ளதாக பாஜக விளக்கம் அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT