Published : 25 Feb 2025 04:28 AM
Last Updated : 25 Feb 2025 04:28 AM
பிரயாக்ராஜ்: மகா கும்பமேளா விழாவுக்கு பக்தர்கள் வருவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பிரயாக்ராஜ் நகர மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ உத்தர பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது. அங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது.
மகா சிவராத்திரி திருநாளான பிப்ரவரி 26-ம் தேதிவரை, 45 நாள்களுக்கு இந்த மகா கும்பமேளா விழா நடைபெறவுள்ளது. இந்த ஆன்மிக பெருநிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து இதுவரை 62 கோடி பக்தர்கள் புனித நீராடியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மகா கும்பமேளா விழாவுக்கு பக்தர்கள் வருவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பிரயாக்ராஜ் நகர மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இதுகுறித்து பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: மகா கும்பமேளா விழாவுக்கு கோடிக்கணக்கான மக்கள் வருகின்றனர். இதனால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரயாக்ராஜ் நகருக்கு வரும் தேசிய நெடுஞ்சாலை, மாநிலச் சாலைகள், மாவட்டச் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறுகின்றன.
அதிக அளவு மக்கள், வாகனங்கள் வருவதால் பிரயாக்ராஜ் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு நகர மக்கள் வெளியில் வருவதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜ் நகரில் நுழைவதால் அதிக சிரமங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம்.
மகா கும்பமேளாவில் கடைசியாக நடைபெறும் அமிர்த ஸ்னானம் (அமிர்த குளியல்) விழாவும் முடிந்து விட்டது. எனவே கும்பமேளாவின் கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டோம். எனவே, இப்போது கூட்டம் குறைந்திருக்கவேண்டும். ஆனால், இதுவரை குறையவில்லை.
எனவே, பொதுமக்கள் விழாவுக்கு வருவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். பக்தர்களால்தான் இங்கு போக்குவரத்து நெரிசல், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நகரின் சுற்றுச்சூழலும் கெடுகிறது. வீடுகளில் இருந்து வாகனங்களை எடுக்கக்கூட முடிவதில்லை. ஏராளமான மக்கள் வீதிகளில் சுற்றித் திரிகின்றனர்.
கடவுளை நேசிப்பவர்கள் தயவு செய்து இங்கு வரவேண்டாம். கங்கையும், சங்கமும் எங்கும் சென்றுவிடாது. சில நாட்கள் கழித்து நீங்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வந்து இங்கு புனிதக் குளியல் செய்யலாம். உங்களை (பக்தர்கள்) தயவு செய்து இதைக் கேட்டுகொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT