Published : 25 Feb 2025 01:06 AM
Last Updated : 25 Feb 2025 01:06 AM

உடல் பருமனை குறைக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: நடிகர் மாதவன் உள்ளிட்ட 10 பேருக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: உடல் பருமனை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கினார். இதுதொடர்பாக நடிகர்கள் மாதவன், மோகன் லால், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட 10 பேருக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 119-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் வானொலியில் ஒலிபரப்பானது. அப்போது உடல் பருமன் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி விரிவாக பேசினார்.

"எட்டு பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளார். குழந்தைகளிடம் உடல் பருமன் பிரச்சினை 4 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க முதலில் உடல் பருமன் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். உடல் எடையை குறைக்க ஓர் அறிவுரையை கூறுகிறேன்.நீங்கள் தற்போது பயன்படுத்தும் சமையல் எண்ணெயில் 10 சதவீதத்தை குறைத்து கொள்ளுங்கள். சமையல் எண்ணெய் வாங்கும்போதே 10 சதவீதத்தை குறைத்து வாங்குங்கள். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டை கண்டிப்புடன் கடைப்பிடியுங்கள்" என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

மேலும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, குத்துச் சண்டை வீராங்கனை நிகித் ஜரீன், மருத்துவர் தேவி ஷெட்டி ஆகியோரும் பிரதமரோடு இணைந்து சத்தான உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

மனதில் குரலில் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "சமையல் எண்ணெய் பயன்பாட்டை நீங்கள் குறைத்தால் மட்டும் போதாது. உங்களுக்கு தெரிந்த 10 பேரிடம் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சவால் விடுங்கள். இந்த விழிப்புணர்வு முயற்சி நாட்டின் உடற்பருமன் பிரச்சினையை எதிர்த்து போராட பேருதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 23-ம் தேதி ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க அறிவுறுத்தினேன். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்ல 10 பிரபலங்களை முன்மொழிகிறேன்.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, போஜ்புரி நடிகர் தினேஷ் லால் யாதவ், துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர், பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, நடிகர் மோகன்லால், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேணி, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, நடிகர் மாதவன், பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், மாநிலங்களவை எம்பி சுதா மூர்த்தி ஆகியோரை பரிந்துரைக்கிறேன்.

உங்களுக்கு நான் சவால் விடுத்துள்ளேன். நீங்கள் 10 பேரும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அதோடு உங்களுக்கு தெரிந்த 10 பேருக்கு சவால் விடுக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து உடல் பருமனுக்கு எதிரான போரை தொடங்குவோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லா சவால்: காஷ்மீ்ர் முதல்வர் உமர் அப்துல்லா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

உடல் பருமனால் இதய நோய், நீரிழிவு, மாரடைப்பு, சுவாச கோளாறு, மனநலம் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு காண சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதோடு நான் 10 பேருக்கு சவால் விடுக்கிறேன்.

நடிகை தீபிகா படுகோன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பாலக் கவுர், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, பிட் இந்தியா தூதர் குல்தீப், வில்வித்தை வீராங்கனை ஷீத்தல், கிரிக்கெட் வீராங்கனை இக்ரா ரசூல், பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார், ஜேஎஸ்டபிள்யூ குழும தலைவர் சாஜன் ஜிண்டால் ஆகியோர் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சவால் விடுக்கிறேன்.

இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x