Published : 23 Feb 2025 05:06 PM
Last Updated : 23 Feb 2025 05:06 PM
புதுடெல்லி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மகிழ்சியாக இருங்கள்; எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் நேர்மறை உணர்வுடன் தேர்வுகளை அணுகுங்கள் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.
மக்களுடன் உரையாடும் தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல்(மன் கி பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இது பத்தாம்-பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கான காலம். நம்முடைய இளம் நண்பர்கள், அதாவது தேர்வு வீரர்களுக்கு, நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல், நேர்மறை உணர்வோடு உங்கள் தேர்வுகளை எழுதுங்கள். ஒவ்வோர் ஆண்டும் தேர்வுகளை எதிர்கொள்வோம் (பரீக்ஷா பே சர்ச்சா) நிகழ்ச்சியில் நாம் நமது தேர்வெழுதும் வீரர்களுக்குத் தேர்வுகளோடு தொடர்புடைய பலப்பல விஷயங்கள் குறித்து விவாதிக்கிறோம்.
இப்போது இந்த நிகழ்ச்சி நன்கு நிலைபெற்ற ஒரு வடிவம் பெற்று விட்டது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதிலே புதிய புதிய வல்லுநர்களும் இணைந்து வருகிறார்கள். இந்த ஆண்டு தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சிக்கு ஒரு புதிய வடிவம் தரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வல்லுநர்களோடு கூடவே, எட்டு பல்வேறு பகுதிகளும் இடம் பெற்றன. ஒட்டுமொத்த தேர்வுக்கான தயாரிப்புத் தொடங்கி, உடல்நலப் பராமரிப்பு மற்றும் மனநலம், உணவு போன்ற விஷயங்களும் இதில் இடம் பெற்றன.
கடந்த ஆண்டுகளில் சிறந்து விளங்கியவர்களும் தங்கள் கருத்துக்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். பல இளைஞர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் என இந்த முறை பலர் எனக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த வடிவம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஏனென்றால் இதிலே ஒவ்வொரு விஷயம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
இன்ஸ்டாகிராமிலும் கூட நமது இளைய நண்பர்கள், இந்த பகுதிகளை அதிக எண்ணிக்கையில் பார்த்திருக்கிறார்கள். தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியின் இந்தப் பகுதிகளை இதுவரை பார்க்காத நமது இளைய நண்பர்கள், கண்டிப்பாக இவற்றைப் பாருங்கள்.
இந்த பகுதிகள் அனைத்தையுமே நமோ செயலியில் உங்களால் காண முடியும். தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் நமது வீரர்களுக்கு நான் மீண்டும் சொல்ல விரும்புவது என்னவென்றால், மகிழ்ச்சியாக இருங்கள், அழுத்தம் எதுவும் இல்லாமல் இருங்கள் என்பதே!" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT