Published : 23 Feb 2025 03:56 PM
Last Updated : 23 Feb 2025 03:56 PM
வாராணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாராணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.O (கேடிஎஸ் 3.O) சார்பில் அகத்தியர் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
வாராணாசியின் கேடிஎஸ் 3.O வின் கருப்பொருளாக அகத்தியர் இடம்பெற்றுள்ளார். மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் கேடிஎஸ் 3.O சார்பில், வாராணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில்(பிஎச்யூ) அகஸ்திய முனி குறித் தேசிய கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
கேடிஎஸ் 3.O வுடன் இதை, பிஎச்யூவின் கல்வித்துறைகளும் இணைந்து நடத்தி இருந்தன. இந்த பட்டியலில் பிஎச்யூவின் சித்தாந்த தரிசனம் துறை, இந்தியன் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தின் ஆயுர்வேதத் துறை ஆகியன இடம் பெற்றிருந்தன. இந்த கருத்தரங்குக்கான தொழில்நுட்ப உதவியை மத்திய அரசின் தேசிய சித்தா கவுன்சில் மற்றும் சென்னையின் தேசிய சித்தா நிறுவனம் செய்திருந்தன. இதன் முக்கிய விருந்தினராக இந்தியன் மெடிக்கல் சயின்ஸ் இயக்குநரும் பிஎச்யூவின் பேராசிரியருமான எஸ்.என்.சங்கவர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
பிஎச்யூவின் ஆயுர்வேதத் துறை டீனான பேராசிரியர் பி.கே. கோஸ்வாமி, தேசிய சுகாதார அமைப்பில் ஆச்சார்ய அகஸ்திய முனியின் ஆழமான செல்வாக்கை எடுத்துரைத்தார். குறிப்பாக, அவர் தனது உரையில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பராமரித்தல் தொடர்பான ஆச்சார்ய அகஸ்தியரின் பல போதனைகளை மேற்கோள் காட்டினார். இந்த கருத்தரங்கில், நவீன சுகாதாரத்தில் சித்த அமைப்பின் பங்கு குறித்த நுண்ணறிவு மிக்க கண்ணோட்டங்களை சென்னை தேசிய சித்த நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் கே. வெண்ணிலா வழங்கினார்.
இத்துடன் டாக்டர் ஆர். காயத்ரி மற்றும் டாக்டர் பி.அன்பரசன் ஆகியோரின் சிறப்புச் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. புது தில்லியில் உள்ள ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய சித்த கவுன்சிலைச் சேர்ந்த டாக்டர் ஏ.ராஜேந்திர குமார், அகத்தியர் பற்றியச் சிந்தனையைத் தூண்டும் உரையை நிகழ்த்தினார். பேராசிரியர் கே.எச்.எச்.வி.மூர்த்தி, அமைப்புத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஓ.பி. சிங்,சித்த மருத்துவத்தின் மீது அதிகரித்து வரும் தேசிய முக்கியத்துவத்தையும், அதன் வளர்ந்து வரும் ஏற்றுக்கொள்ளலையும் வலியுறுத்தினர்.
இப்பேராசிரியர்களின் உரைகளில், சமகால சுகாதார சவால்களில் பாரம்பரிய மருத்துவத்தின் பொருத்தத்தை எடுத்துக்காட்டின. இந்நிகழ்ச்சியில் டாக்டர் அனுராக் பாண்டே நன்றியுரை வழங்கினார். அகத்தியர் தொடர்பான இந்த தேசியக் கருத்தரங்கில் வைத்யா சுஷில் துபே, டாக்டர் அனுராக் பாண்டே, பேராசிரியர் சி.எஸ்.பாண்டே, பேராசிரியர் ராணி சிங், பேராசிரியர் கே.என். சிங், பேராசிரியர் பி. ராம் மற்றும் பேராசிரியர் வந்தனா வர்மா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT