Published : 23 Feb 2025 05:00 AM
Last Updated : 23 Feb 2025 05:00 AM

மகா கும்பமேளாவில் பங்கேற்க முடியாத பக்தர்களின் புகைப்படத்தை புனித நீராட்ட ரூ.1,100 கட்டணம்

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் ஒரு பக்தரின் புகைப்படத்தை புனித நீராட்ட ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த விழா வரும் 26-ம் தேதி நிறைவடைய உள்ளது. சில நாட்களே இருப்பதால் பிரயாக்ராஜில் பக்தர்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் வெளிநாடு மற்றும் நாட்டின் தொலைவான பகுதிகளை சேர்ந்த பக்தர்களுக்காக பிரயாக்ராஜை சேர்ந்த தீபக் கோயல் என்பவர் புதிய சேவையை தொடங்கி உள்ளார். இதன்படி தீபக் கோயலின் வாட்ஸ் அப் எண்ணுக்கு பக்தர்கள் புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர். இந்த புகைப்படங்களை அச்சு பிரதி எடுக்கும் தீபக் கோயல் திரிவேணி சங்கமத்தில் அவற்றை புனித நீராட்டி வருகிறார். ஒரு புகைப்படத்துக்கு அவர் ரூ.1,100 கட்டணம் வசூலிக்கிறார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், "மகா கும்பமேளாவை ஒட்டி நான் ஸ்டார்ட் அப் வணிகத்தை தொடங்கி உள்ளேன். எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு புகைப்படம் அனுப்பினால் அதை பிரின்ட் எடுத்து புனித நீராட்டுவேன். நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்திய 24 மணி நேரத்தில் உங்கள் புகைப்படம் புனித நீராட்டப்படும். இது டிஜிட்டல் புனித நீராடல்" என்று தெரிவித்துள்ளார்.

தனது வாட்ஸ் அப் எண், ஆன்லைன் பணப் பரிமாற்றத்துக்கான விவரங்களையும் தீபக் கோயல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். திரிவேணி சங்கமத்தில் பக்தர்களின் புகைப்படங்களை அவர் புனித நீராட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x