Published : 23 Feb 2025 03:56 AM
Last Updated : 23 Feb 2025 03:56 AM

போதி சத்துவராக ஆட்சி நடத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி: பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே புகழாரம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி போதி சத்துவராக ஆட்சி நடத்துகிறார் என்று பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே புகழாரம் சூட்டி உள்ளார்.

தலைமை பண்பை வளர்ப்பது தொடர்பான மாநாடு தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விழாவில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவும் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியை எனது அண்ணனாக பாவிக்கிறேன். அவரது அறிவுரைகளை பின்பற்றி நடக்கிறேன். இந்தியாவின் அனைத்து துறைகளிலும் சிறந்த தலைமையை உருவாக்க பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார். அவரது துணிச்சல், தொலைநோக்கு பார்வை, ஞானம், அறிவு என்னை வியக்க வைக்கிறது. வளமான இந்தியாவை உருவாக்க அவர் அயராது பாடுபட்டு வருகிறார்.

தலைமை என்பது மிக உயர்ந்த பதவி ஆகும். தொலைநோக்கு பார்வை, துணிச்சல் மிக்கவர்கள் மட்டுமே தலைமை பதவிகளில் அமர வேண்டும். மக்களின் வாழ்க்கையை மாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும். நலமான, வளமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை மக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். என்னைப் பொறுத்தவரை அன்பு, அறிவு, துணிச்சல் உள்ளிட்ட உயர் பண்புகளுடன் போதி சத்துவராக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடத்தி வருகிறார். இவ்வாறு பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே பேசினார்.

புத்த மதத்தில் போதி சத்துவர் என்றால் போதி நிலையில் வாழ்பவர் என்று அர்த்தம். அவர்கள், தன்னலம் மறந்து மக்களின் நலனுக்காக வாழ்பவர்கள். மழை மேகம் போன்று எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மைகளை அளிப்பவர்கள். ஒழுக்கம், தர்மம், பிரம்மச்சரியத்தை கண்டிப்புடன் பின்பற்றுவர்கள். புத்த மதத்தை தோற்றுவித்த கவுதம புத்தர், போதி நிலையை அடையும் முன்பு தன்னை போதி சத்துவர் என்றே அழைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x