Published : 22 Feb 2025 01:46 PM
Last Updated : 22 Feb 2025 01:46 PM

“மோடி உத்தரவாதத்தை நம்பிய மகளிருக்கு ஏமாற்றம்” - டெல்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

புதுடெல்லி: மகளிருக்கு மாதம்தோறும் ரூ. 2,500 வழங்கும் திட்டம் விவகாரத்தில் பிரதமர் மோடியின் உத்தரவாதத்தை நம்பிய டெல்லி பெண்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் அடிஷி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இன்று (பிப். 22) அவர் எழுதியுள்ள கடிதத்தில், "பாரதிய ஜனதா கட்சியின் மிக உயர்ந்த தலைவரும், நாட்டின் பிரதமருமான நரேந்திர மோடி, கடந்த மாதம் 31-ம் தேதி துவாரகாவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பாஜக அரசு அமைந்த பிறகு, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று டெல்லியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு உறுதியளிக்கிறேன். இது மோடியின் உத்தரவாதம் என சொன்னார்.

பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் பிப்ரவரி 20 அன்று நடைபெற்றது. ஆனால், பெண்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. டெல்லியின் தாய்மார்களும் சகோதரிகளும் மோடியின் உத்தரவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். இப்போது அவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்றக் குழு நாளை (பிப்.23) உங்களைச் சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க விரும்புகிறது.

உங்கள் பரபரப்பான கால அட்டவணையில் சிறிது நேரம் ஒதுக்கி, உங்களைச் சந்திக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இதன்மூலம் இந்தத் திட்டத்தின் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கான எங்கள் கருத்துகளை உங்களிடம் முன்வைக்க முடியும் என்று டெல்லியின் லட்சக்கணக்கான பெண்கள் சார்பாக நான் உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என அதிஷி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (பிப்.21) அதிஷி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், இதே குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு நேற்று பதில் அளித்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா, “டெல்லியை காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகள் ஆண்டது. ஆம் ஆத்மி கட்சி 13 ஆண்டுகள் ஆண்டது. அதில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்பதற்கு பதிலாக, நாங்கள் பதவியேற்று ஒரே நாளில் எங்களை எப்படி அவர்கள் கேள்வி கேட்க முடியும்? பதவிப் பிரமாணம் எடுத்து முடித்த பின்பு முதல் நாளிலேயே நாங்கள் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினோம். ஆம் ஆத்மி கட்சியால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆயுஸ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.

எங்களைக் கேள்வி கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை. நாம் இப்போது டெல்லியைப் பற்றி கவலைப்படுவோம். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் டெல்லி அதன் உரிமைகளைப் பெறும். அவர்கள் அவர்களின் கட்சியை முதலில் பார்க்கட்டும். அங்கிருந்து பலர் வெளியேற விரும்புகிறார்கள். சிஏஜி அறிக்கை சட்டப்பேரவையில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். அதில் பலர் அம்பலப்படுவார்கள்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x