Published : 22 Feb 2025 06:50 AM
Last Updated : 22 Feb 2025 06:50 AM

2024 தேர்தலில் பாஜக வெற்றியை தடுக்க சதி? - இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த லஞ்சம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு

நியூயார்க்: இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்காவை ஆண்ட முந்தைய ஜோ பைடன் அரசு விரும்பியது. அதனால்தான் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு நிதியுதவி வழங்கியதாக கருதுகிறேன். இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் தேர்தலின்போது வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு வழங்கி வந்த ரூ.182 கோடி நிதியுதவியை நிறுத்துவதாக எலான் மஸ்க் தலைமையிலான டிஓஜிஇ குழு சமீபத்தில் அறிவித்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேட்டபோது, ‘‘இந்தியா மீதும் பிரதமர் மோடி மீதும் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா ஏன் ரூ.182 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் அவர் கூறும்போது, “இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்காவை ஆண்ட முந்தைய ஜோ பைடன் அரசு விரும்பியது. அதனால்தான் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு நிதியுதவி வழங்கி இருப்பதாக கருதுகிறேன். இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதுபற்றி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறியதாவது: 2024 மக்களவை தேர்தலின் போது பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்வதாக பிரதமர் மோடி குற்றம் சுமத்தியிருந்தார். தற்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த தகவல்கள் மூலம் அவை உண்மையாகி உள்ளன. கடந்த 2023-ல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி லண்டன் பயணம் மேற்கொண்டார். அப்போதுதான் அவர் வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பு கொண்டு, இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் தலையிடுமாறு வலியுறுத்தினார். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் தலைவர்கள் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. அவர்கள் கூறியதாவது: பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா: இந்தியா ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு. நமது உள்நாட்டு விவகாரங்களில் எந்த வெளிநாட்டு நிறுவனமும் ஏன் தலையிட வேண்டும். பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு ஆதரவை நாடினார். அவர்களால் பிரதமர் மோடியை தங்கள் சொந்த முயற்சிகளால் தோற்கடிக்க முடியாது. அதனால்தான் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை நாடுகின்றனர். பிரதமர் மோடி மீதான வெறுப்பில், அவர்கள் இந்தியாவையே வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்திய ஜனநாயகத்தை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா: பாஜகவின் மூத்த தலைவர் ஸ்மிருதி இரானிகூட அமெரிக்காவின் நிதியுதவி பெற்றவர்தான். யுஎஸ்ஏஐடி எனப்படும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் நிதியை ஸ்மிருதி இரானி பெற்றுள்ளார். அந்த நிதியை பயன்படுத்தி, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார் ஸ்மிருதி இரானி. எனவே, இந்த போராட்டத்தின் பின்னணியில் யுஎஸ்ஏஐடி இருந்தது என்று நாங்கள் கூறலாமா. சமூக சேவகர் அன்னா ஹசாரே, காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இந்த பெரிய அளவிலான போராட்டத்துக்கு பின்னர் எங்கள் கட்சி டெல்லியில் ஆட்சியை இழந்தது. அதற்கு பிறகு அமெரிக்கா சென்ற அன்னா ஹசாரே, அங்கு ரோட்ஷோக்களை நடத்தினார். இந்த விஷயத்தில் ஃபோர்டு அறக்கட்டளையிடம் இருந்து அன்னா ஹசாரே நிதியை பெற்று பயன்படுத்தினார் என்பது அனைவருக்குமே தெரிந்த செய்தி. இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலையீடு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தீவிர விசாரணை அவசியம்: இந்நிலையில், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் நடைமுறையில் வெளிநாட்டு தலையீடு இருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்தின் மீதான மிருகத்தனமான தாக்குதல். நமது ஜனநாயக விழுமியங்கள் மீதான கொடூரமான தாக்குதலை வெளிநாட்டு சக்திகள் நடத்த முயல்கின்றன. அந்த சக்தி
களுக்கு எதிராக பதிலடி கொடுப்பது நமது தேசியக் கடமை. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை அம்பலப்படுத்த முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பான உண்மையைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையின் வேர்களுக்கு சென்று, அதை வேரில் இருந்தே அழிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தலில் வெளிநாட்டு தலையீடா? - வெளியுறவு துறை விசாரணை

மக்களவை தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது: 2024 மக்களவை தேர்தலின்போது அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நிதி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள தகவல் கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த கவலைகளுக்கு வழிவகுத்துள்ளது.
இதுபற்றி வெளியுறவு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. விசாரணையில் முன்னேற்றம் இருந்தால் வெளிப்படையாக தெரிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x