Published : 22 Feb 2025 06:00 AM
Last Updated : 22 Feb 2025 06:00 AM
மகா கும்பமேளா மூலம் உத்தர பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இந்த விழா வரும் 26-ம் தேதி நிறைவடைய உள்ளது. இதுதொடர்பாக உத்தர பிரதேச சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கூறியதாவது:
வரும் 2027-ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை பாரதம் எட்டும். இந்த லட்சியத்தை எட்ட உத்தர பிரதேசம் உறுதுணையாக இருக்கும். பொருளாதார வளர்ச்சிக்காக மாநில அரசு சார்பில் புதிதாக 10 துறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன்காரணமாக தற்போது மாநிலத்தின் பொருளாதாரம் ரூ.28 லட்சம் கோடியை எட்டி உள்ளது. பாஜக ஆட்சியில் உத்தர பிரதேசம் முழுவதும் சுமார் 6 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவால் மாநிலத்தின் பொருளாதாரம் அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த விழாவால் உத்தர பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களால் உத்தர பிரதேச விவசாயிகளின் வருவாய் 1.5 மடங்காக அதிகரித்து உள்ளது. அனைத்து துறைகளிலும் மாநிலம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. வரும் 2029-ம் ஆண்டில் நாட்டில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் உருவெடுக்கும்.
இதற்காக தொழில் துறை, விவசாயம், சமூக பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி, வரி வசூல், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, சேவை துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அப்போது உத்தர பிரதேசத்துக்கு ரூ.40 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது. இதில் ரூ.15 லட்சம் கோடி மாநிலத்தில் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 60 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT