Published : 21 Feb 2025 06:22 AM
Last Updated : 21 Feb 2025 06:22 AM
டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று நடந்த பிரம்மாண்ட விழாவில் மாநில முதல்வராக ரேகாகுப்தா பதவியேற்றார். பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித் தொகைவழங்கப்படும். அடுத்த மாதம்8-ம் தேதி அவர்களது வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
கடந்த 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக தலைமை சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக உயர்நிலை கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் துணை முதல்வர் பவன் கல்யாணும் விழாவில் பங்கேற்றனர். மேலும் விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 50,000 பேர் விழாவில் பங்கேற்றனர். சுமார் 25,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் டெல்லியின் 9-வது முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஸ்ரா, மச்சிந்தர் சிங் சிர்சா, ஆசிஷ் சூட், பங்கஜ் குமார் சிங், ரவீந்தர் இந்த்ராஜ் சிங் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதில் பர்வேஷ் வர்மாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: டெல்லி புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு வாழ்த்துகள். கடைநிலையில் இருந்து அவர் முதல்வராக உயர்ந்துள்ளார். கல்லூரி காலத்தில் அரசியலில் கால் பதித்தார். டெல்லி பாஜகவின் வளர்ச்சிக்காக உழைத்தார். டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைநகரின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டார்.
தற்போது முதல்முறையாக எம்எல்ஏவாகி முதல்வராக பதவியேற்று இருக்கிறார். டெல்லியின் வளர்ச்சிக்காக அவர் தனது முழுசக்தியுடன் பணியாற்றுவார். டெல்லி அரசில் புதிதாக பதவியேற்று இருக்கும் 6 கேபினட் அமைச்சர்களையும் வாழ்த்துகிறேன். புதிய குழு டெல்லியில் நல்லாட்சி நடத்தும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு ரூ.2,500 நிதியுதவி: புதிய முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது: டெல்லி முதல்வராக பதவியேற்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைமைக்கு மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதன்படி அடுத்த மாதம் 8-ம் தேதி பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,500 டெபாசிட் செய்யப்படும். முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சிக் காலத்தில் மக்களின் வரிப்பணத்தில் பல கோடி ரூபாபை வாரியிறைத்து சீஸ் மஹால் புதுப்பிக்கப்பட்டது. அந்த பங்களாவில் நான் குடியேற மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிற்பகல் 3 மணிக்கு டெல்லி தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ரேகா குப்தா சென்றார். அவருக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
யமுனை நதியில் ஆரத்தி: மாலை 5 மணி அளவில் முதல்வர் ரேகா குப்தாவும், 6 அமைச்சர்களும் யமுனை நதிக் கரைக்கு சென்று ஆரத்தி, பூஜை, வழிபாடுகள் நடத்தினர். இரவு 7 மணிக்கு முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டார்.
வாழ்க்கை குறிப்பு: கடந்த 1974-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி ஹரியானாவின் ஜுலானா பகுதியில் ரேகா குப்தா பிறந்தார். அவரது தந்தை ஜெய் பகவான் ஜிண்டால் பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணியாற்றினார். தந்தையின் பணி காரணமாக ரேகா குப்தாவின் குடும்பம் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்தது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்றபோது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் அவர் இணைந்தார். டெல்லி பல்கலைக்கழக யூனியன் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார். பி.காம் பட்டம் பெற்ற பிறகு காஜியாபாத் ஐஎம்ஐஆர்சி கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.
கல்லூரி காலம் முதலே அரசியலில் தீவிர ஆர்வம் காட்டிய ரேகா குப்தா டெல்லி மாநகராட்சி தேர்தலில் 3 முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி பாஜகவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருக்கமாக இருந்த ரேகா குப்தா டெல்லி ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தேர்தலில் டெல்லி பெண்கள் பெருவாரியாக பாஜகவுக்கு வாக்களித்ததால் 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. எனவே பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் டெல்லியில் பெண் முதல்வர் பதவியேற்றுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல்வர் ரேகா குப்தா கடந்த 1998-ம் ஆண்டில் தொழிலதிபர் மணீஷ் குப்தாவை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு நிகுன்ஜ் குப்தா என்ற மகனும் ஹர்ஷிதா என்ற மகளும் உள்ளனர்.
பாஜகவின் ஒரே பெண் முதல்வர்: நாடு முழுவதும் 21 மாநிலங்களில் பாஜக மற்றும் அந்த கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெறுகிறது. தற்போதைய சூழலில் பாஜகவின் ஒரே பெண் முதல்வர் என்ற பெருமையை ரேகா குப்தா பெற்றுள்ளார்.
இந்தியாவில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் மேற்குவங்கத்தில் மட்டுமே பெண் முதல்வர் (மம்தா பானர்ஜி) ஆட்சி நடத்துகிறார். அவருக்கு அடுத்து நாட்டின் 2-வது பெண் முதல்வர் என்ற பெருமையை ரேகா குப்தா பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT