Last Updated : 21 Feb, 2025 01:07 AM

1  

Published : 21 Feb 2025 01:07 AM
Last Updated : 21 Feb 2025 01:07 AM

நில மோசடி வழக்கில் சித்தராமையாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்தா போலீஸார் தகவல்

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் லோக் ஆயுக்தா போலீஸார் 11 ஆயிரம் பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் சித்தராமையாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதால், இவ்வழக்கை விசாரிக்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து மைசூரு லோக் ஆயுக்தா போலீஸார் விசாரணை நடத்தி 11 ஆயிரத்து 200 பக்க அறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், ''இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள‌ சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மல்லிகார்ஜூன சுவாமி, தேவராஜ் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராகவும் எந்த ஆதாரங்களும் இல்லை.

சித்தராமையா தனது அதிகாரத்தை பயன்படுத்தி மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு கடிதம் வாயிலாகவோ, தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டதற்கான சாட்சிகள் எதுவும் இல்லை. நில முறைகேடு நடந்ததற்கு, போதுமான ஆதாரங்கள் கிடைக்கபெற‌வில்லை.

இதன் குற்றச்சாட்டுகள் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் தண்டிப்பதற்கு ஏதுவானதாக இல்லை. சித்தராமையாவின் தலையீடு இருந்ததற்கான நேரடி, மறைமுக ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே நால்வரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்யும் வகையில் பி ரிப்போர்ட் வழங்கப்படுகிறது''என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து பதிலளிக்குமாறு புகார்தாரர் ஸ்நேகமயி கிருஷ்ணாவுக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு இந்த‌ அறிக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x