Published : 19 Feb 2025 06:58 PM
Last Updated : 19 Feb 2025 06:58 PM

“மக்களின் நம்பிக்கை மீதான தாக்குதல் இது!” - மம்தாவின் ‘மரண கும்பமேளா’ கருத்துக்கு சிவராஜ் சவுகான் எதிர்வினை

புதுடெல்லி: மகா கும்பமேளாவை மரண கும்பமேளா என விமர்சித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “மக்களின் நம்பிக்கை மீது தாக்குதல் தொடுப்பதும் குற்றமே” என்று சாடியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணங்களைக் குறிப்பிட்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மகா கும்பமேளாவை மரண கும்பமேளா என்று விமர்சித்திருந்தார். மேலும், கும்பமேளா கூட்ட நெரிசலில் மரணித்தவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் மறைப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

மம்தா பானர்ஜியின் இந்தக் கருத்து குறித்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், "சனாதனத்தை அவமதிப்பது எதிர்க்கட்சிகளின் இயல்பாகி விட்டது. இந்தியாவின் கலாச்சாரம் கங்கை நதியின் நீரோட்டதைத் போல ஆயிரமாண்டுகளாக தொடர்கிறது. சனாதனத்தை நோக்கி விரல் நீட்டும் அவர்கள் (எதிர்க்கட்சியினர்) தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள். மக்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளைத் தாக்குவதும் குற்றம்தான்" என்று தெரிவித்தார்.

மம்தாவுக்கு அகிலேஷ் ஆதரவு: இதனிடையே, மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "மகா கும்பமேளா நிலைமை குறித்து மம்தா பானர்ஜி கூறியது சரியே.அவருடைய மாநிலத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்துள்ளனர். ஆனால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்த கும்பமேளா முதலில் ஏன் நடத்தப்பட்டது? கும்பமேளாவுக்கு நீண்ட வரலாறு உண்டு. மக்களும் நூற்றாண்டுகளாக வந்து கொண்டிருக்கிறார்கள். அதன் ஏற்பாடுகளுக்கு யார் பொறுப்பு?

முதலில் உத்தரப் பிரதேச முதல்வர் ஒரு கோடி மக்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார். அது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்று மக்கள் நம்பினர். குறிப்பாக, பிரபலங்களும், விஐபிக்களும் அழைக்கப்பட்ட பின்பு இந்த நம்பிக்கை அதிகமானது. ஆனால், உண்மை அப்படியில்லை. பாஜக மக்களின் உணர்ச்சிகளைப் பயன்படுத்திக்கொள்கிறது. இந்த கும்பமேளாவில்தான் அதிக அளவிலான மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அதிக மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள், மிக அதிக அளவிலான மக்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x