Published : 18 Feb 2025 06:26 AM
Last Updated : 18 Feb 2025 06:26 AM
சீனா எதிரி நாடு அல்ல என காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ள கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா - சீனா இடையே பல ஆண்டு காலமாக எல்லைப் பிரச்சினை இருந்துவருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாத நிலை இருக்கிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையே எல்ஏசி எனப்படும் அசல் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து சென்று வருகின்றன. அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருந்து வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4,000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா கூறும்போது, "சீனாவிடம் இருந்து நமக்கு என்ன அச்சுறுத்தல் வருகிறது என்று எனக்கு புரியவில்லை. அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். நமது அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே மோதலாக உள்ளது. மேலும் இந்த அணுகுமுறை எதிரிகளை உருவாக்குகிறது. ஆனால் இது நாட்டுக்குள் ஆதரவைப் பெறுகிறது. இந்த மனநிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். முதல் நாளிலிருந்தே சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக கண்டனம் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் துஹின் சின்ஹா, "காங்கிரஸ் ஆட்சியின்போது 40,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தனர். இன்னும் சீனாவின் அச்சுறுத்தலை அவர்கள் காணவில்லை போலும் " என்றார்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறும்போது, “ராகுல்காந்தியின் வலது கரம்தான் கட்சியின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா. சீனா மற்றும் பாகிஸ்தானின் நலன்களை நமது நாட்டின் நலன்களுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. ராகுல் காந்தியின் ரிமோட் கண்ட்ரோல் அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் மற்றும் சீனாவின் கைகளில் உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT