Published : 17 Feb 2025 09:02 PM
Last Updated : 17 Feb 2025 09:02 PM
காசிப்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்று 1965 இந்தியா - பாகிஸ்தான் போரில் மரணமடைந்த பரம் வீர் சக்ரா விருது பெற்ற அப்துல் ஹமீதின் பெயரில் அறியப்படுகிறது. இந்த நிலையில், அவரது பெயர் பள்ளி வாயிலில் இருந்த கதவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டுள்ளது. இது அவரது குடும்பத்தினரை அதிருப்தி அடைய செய்துள்ளது.
காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள தாமுபூர் கிராமத்தில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. அண்மையில் அந்தப் பள்ளிக்கு வர்ணம் பூசும் பணி நடந்துள்ளது. அதன் பின்னர் அந்தப் பள்ளி ‘பி.எம். ஸ்ரீ பள்ளி’ என மாற்றப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ‘ஷாஹித் ஹமீத் வித்யாலயா’ என இருந்த பள்ளியின் பெயர் இப்படி மாற்றப்பட்டுள்ளதாக அப்துல் ஹமீதின் பேரப்பிள்ளை ஜமீல் அகமது கூறியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன்புதான் பள்ளியில் வர்ணம் பூசும் பணி நடந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அஜய்யை அப்துல் ஹமீத் குடும்பத்தினர் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். ‘கல்வித் துறையின் மேல் அதிகாரியை பாருங்கள்’ என அவர் பதில் சொல்லி உள்ளார். ஹேமந்த் ராவ் என்ற கல்வித் துறை அதிகாரி அப்துல் ஹமீத் குடும்பத்தினருக்கு முறையான பதில் தராத நிலையில் அவர்கள் சனிக்கிழமை அன்று புகார் கொடுத்துள்ளனர்.
மீண்டும் பள்ளி வாயிலில் அப்துல் ஹமீத் பெயர் இடம்பெற வேண்டுமென அதில் தெரிவித்துள்ளனர். அந்தப் பணியை விரைந்து மேற்கொள்வதாக ஹேமந்த் ராவ் கூறியுள்ளார். பத்திரிகையாளர்களிடமும் ஹேமந்த் ராவ் இதையே உறுதி செய்துள்ளார். இந்த நிலையில், திங்கள்கிழமை அன்றும் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாதது தங்களுக்கு மிகுந்த மன வேதனையை தந்துள்ளதாக அப்துல் ஹமீத் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
1965 இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ‘Patton’ வகை டாங்கிகளை வழங்கியது. அப்போது அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்திய ஹமீத் அவற்றில் மூன்று டாங்கிகளை அழித்து, எதிரியை பின்வாங்க செய்திருந்தார். அவரது வீரத்தை போற்றும் விதமாக மரணத்துக்கு பிறகு அவருக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT