Published : 17 Feb 2025 03:31 PM
Last Updated : 17 Feb 2025 03:31 PM

“தேசிய கல்விக் கொள்கையில் மோடி அரசு உறுதி” - தமிழகத்தில் சிலர் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் சாடல்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

புதுடெல்லி: "தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது” என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த தர்மேந்திர பிரதான், “கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது என்பதை அறிவேன். மாணவர்களிடையே போட்டியை உருவாக்க, ஒரு சமமான நிலையை உருவாக்க, நாம் ஒரு பொதுவான தளத்துக்கு வர வேண்டும். தேசிய கல்விக் கொள்கை (NEP) என்பது புதிய லட்சிய பொதுத் தளமாகும். நான் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன். பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய கல்விக் கொள்கையானது தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

தமிழர் நாகரிகம், தமிழர் கலாச்சாரம், தமிழ் மொழி ஆகியவற்றை ஊக்குவிக்க நாங்கள் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். தமிழ் நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றாகும். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் அதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஓர் இந்திய மொழி என்பதைதான் தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது. இந்தியோ அல்லது வேறு எந்த ஒரு மொழியுமோ திணிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. தேசிய கல்விக் கொள்கை விஷயத்தில் சில நிபந்தனைகள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழர்கள் மீது இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்வதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், "கல்வி என்பது முன்பு மாநில பட்டியலில் இருந்தது. இன்று அது பொதுப் பட்டியலில் உள்ளது. மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்கிறது. எங்கள் முதல்வர் அதை ஏற்க மாட்டார். தயவு செய்து இந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா அளித்துள்ள பேட்டியில், "தேசிய கல்விக் கொள்கை (NEP) என்ற பெயரில், அவர்கள் (மத்திய அரசு) ஒரு குறிப்பிட்ட மொழியை திணிக்க முயற்சிக்கிறார்கள், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நம் நாட்டில் பல மொழிகள் உள்ளன, அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ஒரு முக்கிய அம்சம் உள்ளது. அவர்களின் அரசியல் நன்மை என்று வரும்போது, ​​அவர்கள் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் புகழ்கிறார்கள். ஆனால் உண்மையில், அவர்கள் (பாஜக) ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டுமே ஆதரிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ‘தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பதால் எஸ்எஸ்ஏ நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க முடியாது’ என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்: மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்துக்கு நிதி கிடையாதா? - மத்திய அமைச்சருக்கு முதல்வர், தலைவர்கள் கண்டனம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x