Published : 14 Feb 2025 06:32 AM
Last Updated : 14 Feb 2025 06:32 AM
வக்ஃபு மசோதாவின் கூட்டுக் குழு அறிக்கை மாநிலங்களவையில் நேற்று கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது. அதிருப்தி கருத்துக்கள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. நாடாளுமன்ற கூட்டுக் குழு மீதான அவதூறு கருத்துக்கள் மட்டுமே நீக்கப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வக்ஃபு வாரிய சொத்துக்களை சிறப்பாக பயன்படுத்துவதற்காக வக்ஃபு வாரிய சட்டதிருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அது மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதால், இந்த சட்ட திருத்த மசோதா, பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கையை, அதில் உறுப்பினராக உள்ள பாஜக எம்.பி மேதா விஷ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
அதன்பின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனுப்பிய தகவலை மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வாசிக்கத் தொடங்கினார். அதில் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவருக்கு, உறுப்பினர்கள் சிலர் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிட்பட்டது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வக்ஃபு மசோதா அறிக்கைக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை சிறுது நேரம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது.
குடியரசுத் தலைவரின் தகவலை வாசித்து முடித்தபின் பூஜ்ய நேரத்தை தொடங்க மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் முயற்சித்தார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். அவையை கட்டுப்படுத்திய ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பேச அழைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘ வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான கூட்டுக்குழு அறிக்கையில், பல உறுப்பினர்கள் தெரிவித்த அதிருப்தி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களை மட்டும் அறிக்கையில் குறிப்பிடுவது சரியல்ல. இது கண்டனத்துக்குரியது, ஜனநாயகத்துக்கு விரோதமானது. இது போலி அறிக்கை. இந்த அறிக்கையை திரும்ப பெற்று மீண்டும் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காக எம்பி.க்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த சட்ட திருத்த மசோதாவில் ஒரு பிரிவினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது’’ என்றர்.
கூட்டுக் குழு அறிக்கையில் இருந்து அதிருப்தி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாக திமுக உறுப்பினர் திருச்சி சிவா, ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரும் குற்றம் சாட்டினர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கைளை மறுத்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:
கூட்டுக் குழு அறிக்கையில் இருந்து எந்த கருத்தும் நீக்கப்படவில்லை. அவையை தவறாக வழிநடத்த வேண்டாம். தேவையில்லாத பிரச்சினையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்புகின்றனர். இந்த குற்றச்சாட்டு பொய்யானது. அனைத்து குறிப்புகளும் கூட்டுக் குழு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. எதுவும் நீக்கப்படவில்லை.
காங்கிரஸ் உறுப்பினர் சையது நசீர் உசேன் பேசுகையில், ‘‘ நான் கூறிய கருத்தும் நீக்கப்பட்டுள்ளது’’ என்றார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகெட் கோகலே கூறுகையில், ‘‘ இது மதம் சம்பந்தமானது அல்ல, அரசியல்சாசன விவகாரம்’’ என்றார்.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் அவையில் கேள்வி நேரம் தொடர்ந்தது.
அவதூறு கருத்து நீக்கம்: நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பேட்டியில், ‘‘ உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தில், ஏதாவாது நாடாளுமன்ற கூட்டுக்குழு மீதே அவதூறு கூறும் வகையில் இருப்பதாக அதன் தலைவர் உணர்ந்தால், அதை நீக்கும் அதிகாரம் கூட்டுக்குழு தலைவருக்கு உள்ளது. உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆட்சேபம் இருந்தால், அதை கூட்டுக்குழு தலைவரிடம் தெரிவிக்கலாம். அனைத்துமே விதிமுறைகள்படிதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT