Published : 11 Feb 2025 12:21 PM
Last Updated : 11 Feb 2025 12:21 PM
புதுடெல்லி: இந்தியாவின் சிறுபான்மையினரை மத்திய அரசு ஒடுக்க முயல்வதாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவர் கே.நவாஸ்கனி புகார் கூறியுள்ளார். இதை அவர் நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில் பேசியபோது தெரிவித்தார்.
இது குறித்து ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்.பியுமான கே.நவாஸ்கனி பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கையையும் அதன் அடிப்படையில் மும்மொழி கொள்கையையும் திணிக்க முயல்கிறது மத்திய அரசு. உங்களின் வஞ்சகமான இந்த நோக்கத்தை மாநில அரசு நிராகரித்துள்ளது.
இந்த ஒரே காரணத்திற்காக அப்பட்டமான அச்சுறுத்தலை எங்கள் தமிழ்நாட்டிற்கு விடுத்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் எங்கள் மாணவர்களுடைய ரூ.2,152 கோடி நிதியை பறித்து வேறு மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து உள்ளீர்கள். வளரும் தலைமுறையின் வளர்ச்சியில் கை வைக்கும் உங்களுடைய செயலை வரலாறு ஒருபோதும் மறக்காது, மன்னிக்காது. நிதி தர மறுத்து உங்கள் கல்விக் கொள்கையையும் மொழி திணிப்பையும் எங்கள் மீது திணிக்க பார்க்கிறீர்கள். சிறுபான்மை மக்களுக்கு எதிரான பார்வையை பாஜக அரசு கடந்த 10 ஆண்டு காலம் தொடர்ந்து விரிவாக்கிக் கொண்டே தான் சென்று கொண்டிருக்கிறது.
அதற்கு இந்த நிதிநிலை அறிக்கையும் விதிவிலக்கு இல்லை. சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்ந்து குறைக்கப்படுவதிலிருந்தும் இதை நாம் பார்க்க முடிகிறது. பட்டியல் சமூகத்திற்கும் பழங்குடியினருக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கும் வழங்கப்படும் பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் , போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்ற கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
இதற்காக, கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.6,360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ரூ.760 கோடி அதில் செலவு செய்யப்படவில்லை. வெளிநாடுகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கான ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்பிற்கு மிகச் சொற்பமான தொகை மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சி படிப்பிற்கான கல்வி உதவித்தொகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. மவுலானா அப்துல் கலாம் ஆசாத் எஜுகேஷன் பவுண்டேஷன் கல்வி உதவித்தொகை இந்த அரசால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
சிறுபான்மை மாணவர்கள் ஆராய்ச்சி கல்வி கற்பதை இந்த அரசு விரும்பவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. எதற்காக இந்த பாரபட்சம்? எதற்காக சிறுபான்மை மக்களின் கல்வியில் கை வைக்கிறீர்கள்? சிறுபான்மை மாணவர்களுக்கான பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கடந்த நிதியாண்டில் அறிவித்த ரூ.326 கோடியில் வரும் ரூ.90 கோடி மட்டுமே செலவு செய்திருக்கிறீர்கள், இந்த நிதி ஆண்டில் வெறும் ரூ.195 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கடந்த நிதி ஆண்டில் ரூ.1,145 கோடி அறிவிக்கப்பட்டு அதில் வெறும் ரூ.344 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது தற்போது அந்த கல்வி உதவித் தொகையையும் ரூ.413.9 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி சிறுபான்மை மாணவர்களின் கல்வியில் கை வைக்கக் கூடிய அரசாக இந்த அரசு இருக்கின்றது. கல்வி ரீதியாகவும் சிறுபான்மை கல்வியில் தாக்குதலை ஏற்படுத்துகிறது, பொருளாதார ரீதியாகவும் சிறுபான்மையினரின் பொருளாதாரத்தை குலைக்கும் வக்ஃபு திருத்த சட்டத்தை இந்த அரசு கொண்டுவர நினைக்கிறது. ஏற்கெனவே, உள்ள வக்ஃபு சட்டங்களினால் நாங்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றோம் என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கு எந்த தீர்வையும் இந்த அரசு கொண்டு வரவில்லை, வஃக்பில் நாங்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கக்கூடிய சொத்துக்களை மேம்படுத்த ஒரு திட்டம் இருந்தது.
இந்த திட்டத்தில் ரூ.2 கோடி வரை கடன் உதவி பெறும் வாய்ப்பும் இருந்தது. இதன் மீது நான் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவராக பொறுப்பேற்றவுடன் ஆய்வு செய்தேன். இந்தத் திட்டத்தின் மூலமாக பயன்படக்கூடிய மாநிலங்களின் விவரங்களை விசாரித்ததில் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த கடன் உதவி திட்டத்தில் எந்த மாநிலத்துக்கும் அளிக்கப்படவில்லை எனத் தெரிந்தது. இதற்கு, அந்த திட்டம் மத்திய வக்ஃபு கவுன்சில் ஒப்புதல் அவசியமாகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்த, கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய வக்ஃபு கவுன்சில் அமைக்கப்படவே இல்லை. எனவே, இந்தத் திட்டத்தின் மூலம் யாருக்கும் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
சிறுபான்மையினரின் வக்ஃபு சொத்துக்களில் வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் வருமானம் பெறவும் வழிவகை செய்யப்படவில்லை. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அந்த சொத்துக்களை மீட்பதற்கான எந்த திட்டமும் இல்லை.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை மீட்கும் வகையில் வக்பு திருத்த மசோதா இருக்க வேண்டும். இதைவிடுத்து, இந்த அரசு கொண்டு வரும் திட்டங்கள், சிறுபான்மை மக்களின் கல்வி ரீதியாகவும் ஒடுக்கு நோக்கிலும் உள்ளன. பொருளாதார ரீதியாகவும் எங்களை ஒடுக்கும் நோக்கமும் இதில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT