Published : 11 Feb 2025 11:56 AM
Last Updated : 11 Feb 2025 11:56 AM
புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்காத ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளால், மாநிலக் கட்சிகள் இடையே காங்கிரஸ் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணியின் பெரும்பாலானக் கட்சிகள் காங்கிரஸுக்கு எதிராகத் திரும்பினர். இதற்கு ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் அடித்தளம் இட்டிருந்தார். டெல்லியின் 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அனைத்திலும் பாஜக வென்றதால் இண்டியா கூட்டணிக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸை முற்றிலுமாகப் புறக்கணித்தார் கேஜ்ரிவால். கேஜ்ரிவாலுக்கு இண்டியா கூட்டணியின் இதர உறுப்பினர்களும் ஆதரவளிக்கத் துவங்கினர்.
இந்த பட்டியலில் உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி, மேற்கு வங்க மாநிலத்தின் திரிணமூல் காங்கிரஸ், மகாராஷ்டிராவின் சிவசேனா யூபிடி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில், உ.பி-யின் முன்னாள் முதல்வரான சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மிக்காக டெல்லியில் கேஜ்ரிவாலுடன் இணைந்து பிரச்சாரமும் செய்திருந்தார்.
பிஹாரின் எதிர்கட்சியான ஆர்ஜேடி மட்டும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் என இருவருக்குமே ஆதரவளிக்காமல் விலகி இருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 8-ல் வெளியான டெல்லி தேர்தல் முடிவுகளில் 22 தொகுதிகளில் மட்டுமே ஆம் ஆத்மிக்கு வெற்றி கிடைத்தது அந்த கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்தது. ஆம் ஆத்மிக்கு சுமார் 14 தொகுதிகளில் காங்கிரஸ் இழப்பை ஏற்படுத்தியது.
முக்கியத் தலைவர்களான கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா ஆகியோர் காங்கிரஸ் பெற்ற வாக்குகளால் தோல்வியைத் தழுவினர். காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தால் தமக்கு இந்த நிலை நேர்ந்திருக்காது என ஆம் ஆத்மியினர் தற்போது உணரத் துவங்கி உள்ளனர். எனவே, டெல்லி தேர்தல் முடிவுகளில் தாக்கம் இண்டியா கூட்டணியின் இதர உறுப்பினர்கள் இடையேயும் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கி விட்டது.
வரும் 2027-ல் உ.பி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸை கழட்டிவிடத் திட்டமிட்டிருந்தார் சமாஜ்வாதியின் அகிலேஷ். இப்போது டெல்லி தேர்தல் முடிவுகளால் தன் திட்டத்தை அகிலேஷ், மறுபரிசீலனை செய்யும் வாய்ப்புகள் உள்ளன. மக்களவை தேர்தலில் உ.பி-யின் 80 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 17 ஒதுக்கினார் அகிலேஷ். இவற்றில் எதிர்பாராதவிதமாக சமாஜ்வாதிக்கு 37, காங்கிரஸுக்கு 6 தொகுதிகளும் கிடைத்தன.
கடந்த வருடம் நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இந்த புறக்கணிப்பால் காங்கிரஸின் முழு ஒத்துழைப்பும் அகிலேஷுக்கு கிடைக்கவில்லை. இதன் முடிவுகளில் சமாஜ்வாதிக்கு 9-ல் 3 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
அடுத்து வரும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாலு பிரசாத் யாதவின் மெகா கூட்டணியில் காங்கிரஸுக்கு கடந்த முறையை விடக் குறைவான தொகுதிகள் ஒதுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
டெல்லியின் முடிவுகளால் காங்கிரஸ் கூடுதலானத் தொகுதிகளைக் கேட்கத் தயாராகிறது. இதே சூழல், இதர பிராந்தியக் கட்சிகள் இடையேயும் தொடரும் எனக் கருதப்படுகிறது. இதன் பின்னணியில் தொகுதிகளைப் பெறா விட்டாலும் கணிசமான வாக்குகளைக் காங்கிரஸ் பெறுவதாகக் கருதப்படுவது காரணம்.
ஆம் ஆத்மிக்கு பஞ்சாப் ஆபத்து: இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியிடன் மீதம் உள்ள ஒரே மாநிலமான பஞ்சாபின் ஆட்சிக்கு நெருக்கடி உருவாகி உள்ளது. இம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா, தம்முடன் ஆம் ஆத்மியின் 30 எம்எல்ஏக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்கு அவர், ஆம் ஆத்மியின் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் கடந்த 5 மாதங்களாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாததை சுட்டிக் காட்டியுள்ளார். இது, ஆம் ஆத்மியை உடைத்து மகாராஷ்டிராவில் நடந்தது போல் ஆட்சி அமைக்க காங்கிரஸ் திட்டமிடுவதைக் காட்டுகிறது.
இதிலிருந்து தப்ப, பஞ்சாபின் எம்எல்ஏக்களை டெல்லிக்கு அழைத்து தம் ஆட்சியை காக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் கேஜ்ரிவால். இம்மாநிலத்தில் பாஜகவிற்கு அதிக செல்வாக்கு இல்லை. இதன் காரணமாக, காங்கிரஸும் மகாராஷ்டிராவில் பாஜக உத்தியை பின்பற்ற முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இங்கு கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவை உடைத்து கூட்டணி ஆட்சியை பாஜக அமைத்திருந்தது. பஞ்சாபின் 117 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி 92, காங்கிரஸ் 18, சிரோமணி அகாலி தளம் 3, பாஜக 2, பிஎஸ்பி மற்றும் சுயேச்சை தலா 1 என உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT