Published : 08 Feb 2025 05:36 PM
Last Updated : 08 Feb 2025 05:36 PM

“டெல்லியில் ஆதரிக்கப்படாத பிரதமரின் கொள்கை, நிராகரிக்கப்பட்ட கேஜ்ரிவால் அரசியல்...” - ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீதான வாக்கெடுப்பே தவிர வேறில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. மேலும், மாலை 5 மணி நிலவரப்படி அக்கட்சி 6.35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ள பாஜக 41 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளருமான ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2025 டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீதான வாக்கெடுப்பே தவிர அது வேறொன்றையும் பிரதிபலிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, 2015 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் பிரதமர் மோடி புகழின் உச்சத்தில் இருந்தபோது, ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள், பிரதமரின் கொள்கைகளுக்கு ஆதரவானது அல்ல. மாறாக, இது அரவிந்த் கேஜ்ரிவாலின் வஞ்சகம், ஏமாற்றுதல் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சாதனை பிரச்சார அரசியலை நிராகரிப்பதாகும்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் கீழ் நடந்த பல்வேறு மோசடிகளை முன்னிலைப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரஸ் முன்னிலை வகித்தது. மேலும், கேஜ்ரிவாலின் 12 ஆண்டு கால தவறான ஆட்சி குறித்து வாக்காளர்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

காங்கிரஸ் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்த்தது. இருப்பினும், அது தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ளது. காங்கிரஸின் பிரச்சாரம் தீவிரமாக இருந்தது. அது சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தராமல் போகலாம். ஆனால், நிச்சயமாக டெல்லியில் காங்கிரஸ் தனக்கான இருபபை கொண்டுள்ளது. லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் தொடர் முயற்சிகளால் தேர்தல் ரீதியாக இருந்த இருப்பு விரிவுபடுத்தப்படும். 2030-இல் டெல்லியில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமையும்" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x