Published : 08 Feb 2025 03:56 PM
Last Updated : 08 Feb 2025 03:56 PM
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இது வளர்ச்சிக்கு, நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மாலை 4 மணி நிலவரப்படி 35 தொகுதிகளில் வெற்றி, 13 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் பாஜக உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 16 தொகுதிகளில் வெற்றி 6 தொகுதிகளில் முன்னிலை என 22 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.
டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "மக்கள் சக்தியே முதன்மையானது! பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த டெல்லியில் உள்ள எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது வணக்கமும் வாழ்த்துக்களும்! இந்த ஆசிர்வாதங்களைப் பெறுவதில் நாங்கள் பணிவும் பெருமையும் அடைகிறோம். நீங்கள் எனக்கு அளித்த ஏராளமான ஆசிர்வாதங்களுக்கும் அன்புக்கும் உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
டெல்லியின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் அதன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். எதையும் விட்டுவிட மாட்டோம். இதுவே எங்கள் உத்தரவாதம். இதனுடன், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லி முக்கிய பங்கு வகிப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம். மக்களின் இந்த மகத்தான ஆணையை பெறுவதற்காக இரவும் பகலும் உழைத்த எனது அனைத்து பாஜக தொண்டர்களையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்போது நாம் நமது டெல்லி மக்களுக்கு இன்னும் வலிமையுடன் சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் இருப்போம்" என தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற டெல்லி பாஜகவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, டெல்லியின் பிரகாசமான மற்றும் முற்போக்கான எதிர்காலத்திற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
ஊழலை விட நேர்மையையும், பொய்களை விட உண்மையைத் தேர்ந்தெடுத்ததற்காகவும், அவர்களின் நலனுக்காக உண்மையிலேயே பாடுபடுவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசாங்கத்தையும் தேர்ந்தெடுத்ததற்காக டெல்லி மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை சாத்தியமாக்கிய பாஜக தொண்டர்களின் அயராத முயற்சிகளுக்கும், அவர்களின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT