Published : 08 Feb 2025 03:07 PM
Last Updated : 08 Feb 2025 03:07 PM
புதுடெல்லி: டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்றும், மோடியின் தலைமையின் கீழ் டெல்லி இப்போது ஒரு சிறந்த தலைநகராக மாறும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 11 தொகுதிகளில் வெற்றி, 37 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 10 தொகுதிகளில் வெற்றி 12 தொகுதிகளில் முன்னிலை என 22 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளதை அடுத்து, அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "பொய்கள், வஞ்சகம் மற்றும் ஊழல் நிறைந்த 'கண்ணாடி மாளிகையை' அழிப்பதன் மூலம், டெல்லியை பேரழிவிலிருந்து (AAPda) விடுவிக்கும் பணியை டெல்லி மக்கள் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு முன்மாதிரியாக விளங்கும் வகையில், வாக்குறுதிகளை மீறுபவர்களுக்கு டெல்லி ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. இது டெல்லியில் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. இது ஆணவம் மற்றும் அராஜகத்தின் தோல்வி. இது 'மோடியின் உத்தரவாதம்' மற்றும் மோடியின் வளர்ச்சிப் பார்வை மீது டெல்லி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெற்றியாகும். இந்த மகத்தான வெற்றிக்கு டெல்லி மக்களுக்கு மனமார்ந்த நன்றி.
மோடியின் தலைமையில், பாஜக தனது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவும், டெல்லியை உலகின் நம்பர் 1 தலைநகராக மாற்றவும் உறுதியாக உள்ளது. மீண்டும் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளால் மக்களை தவறாக வழிநடத்த முடியாது என்பதை டெல்லி மக்கள் நிரூபித்துள்ளனர். தூய்மையற்ற யமுனை நதி, தூய்மையற்ற குடிநீர், சேதமடைந்த சாலைகள், நிரம்பி வழியும் சாக்கடைகள், ஒவ்வொரு தெருவிலும் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகள் என ஆம் ஆத்மியின் மோசமான நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தங்கள் வாக்குகளால் பதிலளித்துள்ளனர்.
பெண்களுக்கு மரியாதை அளிப்பது, அங்கீகரிக்கப்படாத காலனி குடியிருப்பாளர்களுக்கு மரியாதை அளிப்பது, சுயதொழில் செய்வதற்கான மகத்தான சாத்தியக்கூறுகள் என மோடியின் தலைமையின் கீழ் டெல்லி இப்போது ஒரு சிறந்த தலைநகராக மாறும்" என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT