Published : 08 Feb 2025 12:47 PM
Last Updated : 08 Feb 2025 12:47 PM

டெல்லி தேர்தல்: 1,170 வாக்குகள் பின்தங்கும் கேஜ்ரிவால், 1911 வாக்குகள் பின்தங்கும் அதிஷி

புதுடெல்லி: புதுடெல்லி தொகுதியில் 1,170 வாக்குகள் வித்தியாசத்தில் கேஜ்ரிவாலும், கல்காஜி தொகுதியில் 1911 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் அதிஷியும் பின்தங்கி உள்ளனர்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக வேட்பாளரைவிட 1,170 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பகல் 12.30 மணி நிலவரப்படி பாஜக 46 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி 24 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.

ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், 9 சுற்றுக்கள் முடிவில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவைவிட 1,170 வாக்குகள் பின்தங்கி உள்ளார். எட்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பர்வேஷ் வர்மா 19,267 வாக்குகளையும், கேஜ்ரிவால் 18,097 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதேபோல், டெல்லி முதல்வர் அதிஷியும் 8 சுற்றுக்கள் முடிவில் 1911 வாக்குகள் பின் தங்கி உள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி முன்னிலை வகித்து வருகிறார்.

ஷகூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பின்தங்கியுள்ளார், மணீஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தனது தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்சித் தொண்டர்கள் சிறப்பாகப் போராடினர். நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தோம். மக்களும் எங்களை ஆதரித்துள்ளனர். ஆனால், நான் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். வெற்றி பெற்ற வேட்பாளரை நான் வாழ்த்துகிறேன். அவர் தொகுதிக்காக உழைப்பார் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்களான கோபால் ராய் பாபர்பூர் தொகுதியிலும், இம்ரான் ஹுசைன் பலிமாறன் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர். மற்ற அமைச்சர்களான சவுரப் பரத்வாஜ் (ஜிகே), ரகுவிந்தர் ஷோக்கீன் (நங்லோய் ஜாட்) ஆகியோரும் பின்தங்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x