Published : 07 Feb 2025 06:25 PM
Last Updated : 07 Feb 2025 06:25 PM

வாக்குச்சாவடி வாரியாக வாக்குப் பதிவு தரவுகளை தேர்தல் ஆணையம் பதிவேற்றவில்லை: கேஜ்ரிவால் சாடல்

புதுடெல்லி: பலமுறை கோரிக்கை விடுத்தும், படிவம் 17சி மற்றும் வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் தரவுகளை தேர்தல் ஆணையம் தமது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்ற மறுத்துவிட்டது என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், "படிவம் 17சி மற்றும் அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாங்குகளின் விபவங்களை பதிவேற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சி transparentelections.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் நாங்கள் அனைத்து தொகுதிகளின் 17சி படிவங்களையும் பதிவேற்றியுள்ளோம். இந்தப் படிவத்தில் தொகுதிகளின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குக்களின் எண்ணிக்கை இடம்பெற்றிருக்கும்.

நாள் முழுவதும், ஒவ்வொரு தொகுதி மற்றும் வாக்குச்சாவடி வாரியான தகவல்கள் அட்டவணையாக கொடுக்கப்பட்டிருக்கும். அதனால், ஒவ்வொரு வாக்காளரும் இதனை எளிதில் அணுக முடியும். வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்கள் அதைச் செய்ய மறுக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நடந்து முடிந்த டெல்லி பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்க நாளை நடைபெற உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைக்குமா அல்லது 27 ஆண்டுகளுக்கு பின்பு பாஜக தலைநகரில் அரியணையை தட்டிப்பறிக்குமா என்பது நாளை தெரியவரும். இந்நிலையில், கேஜ்ரிவால் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இதனிடையே தேர்தலுக்கு பின்பான கருத்துக்கணிப்புகள் 2025 டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இந்த முறை டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x