Published : 02 Feb 2025 03:31 PM
Last Updated : 02 Feb 2025 03:31 PM

“பிஹாருக்கு பல திட்டங்கள்; ஆந்திராவுக்கு ஏமாற்றம்” - சந்திரபாபு நாயுடுவை சாடிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆந்திர மாநிலத்தின் பங்கைப் பெறத் தவறியதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கேற்ப அங்கு புதிய விமான நிலையம், பாட்னா ஐஐடி விரிவாக்கம், தொழிற்சாலைகள், வேளாண் திட்டங்கள் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக கூட்டணி ஆட்சியில், பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் பங்கு முக்கியமானது. இதனால் பிஹாருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஆந்திராவுக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளனர். இது பிஹாருக்கான பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்தின் பங்கைப் பெறத் தவறியதற்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாகக் சாடியுள்ளது. இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்திக் யெல்லபிரகடா என்பவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “சந்திரபாபு நாயுடு தலைமையிலான கட்சியும், நிதிஷ் குமார் தலைமையிலான கட்சியும் நாட்டின் குறிப்பிடத்தக்க கட்சிகளாக இருந்தபோதிலும், ஆந்திராவை விட பிஹார் அதிக நன்மையைப் பெற்றிருப்பதைக் காண்கிறோம். மத்தியில், 16 எம்.பி.க்களைக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி, மாநிலத்திற்கு கணிசமான பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பெறத் தவறியது எப்படி?

இந்த கூட்டணி அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். ஆந்திரப் பிரதேசம் கல்வி, வேளாண்மை, தொழில் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் பட்ஜெட் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பூஜ்ஜியமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைப் பாராட்டினார். தனது எக்ஸ் தளத்தில், “இந்த ஆண்டுக்கான பட்ஜெட், மோடி தலைமையில், ஒரு தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. இது பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது, அதே நேரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சிக்கான ஆறு முக்கிய துறைகளையும் அடையாளம் காட்டுகிறது. நமது நாட்டிற்கு வளமான எதிர்காலத்தை உறுதியளிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x