Published : 02 Feb 2025 02:20 PM
Last Updated : 02 Feb 2025 02:20 PM

‘மக்களால், மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட்’ - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: “2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களால், மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட். இதில் நடுத்தர வர்க்கத்தினரின் குரல்களுக்கு நாங்கள் செவி கொடுத்திருக்கிறோம்.” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய நிர்மலா சீதாராமன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் புகழ்பெற்ற பேச்சை மேற்கோள் காட்டி பட்ஜெட் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

அதன்படி அவர், “மத்திய பட்ஜெட் மக்களால், மக்களுக்காக, மக்களுடையதாக உள்ளது. வரிகளைக் குறைக்கும் யோசனைக்கு பிரதமர் மோடி முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி ஆதரித்தார். ஆனால் அதிகாரிகளை சம்மதிக்க வைக்கத்தான் அதிக நேரம் பிடித்தது.

நேர்மையான வரிசெலுத்துவோராக இருந்தும் தங்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தினரின் குரல்களுக்கு நாங்கள் செவி கொடுத்திருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் தொடர்ந்து 8-வது முறையாக சனிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மொத்தம் 1 மணி நேரம் 17 நிமிடங்​களுக்கு அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். இதில், புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையின் கீழ் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாத சம்பளதாரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2023-ல் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாத சம்பளம் பெறுவோருக்கான நிலையான கழிவு கடந்த பட்ஜெட்டில் ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டது.

ஆனால், மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், மத்திய பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களிடம், “2025-26 பட்ஜெட்டின் ஒரு சிறிய விஷயம் என்னவென்றால், வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரையும் பிஹார் வாக்காளர்களையும் பாஜக கவர்ந்திழுக்கிறது. இந்த அறிவிப்புகளை பிஹாரின் 3.2 கோடி வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரும் 7.65 கோடி வாக்காளர்களும் வரவேற்பார்கள்.

அதேநேரத்தில் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு, பிரதமர் தலைமையிலான பாஜக உறுப்பினர்களின் இடைவிடாத கைதட்டல்கள் மூலம் நிதியமைச்சர் ஆறுதலான வார்த்தைகளை மட்டுமே கூறியுள்ளார்.

இந்த பட்ஜெட்டால் அதிகார வர்க்கம் மகிழ்ச்சியடையும். முடிவாக, பொருளாதாரம் பழைய பாதையில் செல்லும் என்றும், 2025-26 ஆம் ஆண்டில் வழக்கமான 6 அல்லது 6.5 சதவீத வளர்ச்சியை விட அதிகமாக வழங்காது என்றும் நான் கூற விரும்புகிறேன். எங்கள் பார்வையில், எந்த புதிய யோசனைகளும் இல்லாத, பிடியைத் தாண்டிச் செல்லும் விருப்பம் இல்லாத ஒரு அரசாங்கத்தின் பட்ஜெட் இது.” எனக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x