Published : 02 Feb 2025 09:17 AM
Last Updated : 02 Feb 2025 09:17 AM

ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் பட்ஜெட் உரை வாசிப்பு - திருக்குறளை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர்

புதுடெல்லி: நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமனின் பட்ஜெட் உரை 1 மணி நேரம் 17 நிமிடங்​களுக்கு நீடித்​தது.

மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் தொடர்ந்து 8 வது முறையாக நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்​தார். மொத்தம் 1 மணி நேரம் 17 நிமிடங்​களுக்கு அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். இது கடந்த ஆண்டை விட 8 நிமிடம் குறைவாகும். கடந்த ஆண்டு 1 மணி நேரம் 25 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். 2024-ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட் உரையை குறைந்த நேரத்​தில் அதாவது 56 நிமிடங்​களில் முடித்​தார்.

2023-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்​யும்​போது 87 நிமிடங்கள் அவர் பேசினார். 2022-ம் ஆண்டு 92 நிமிடங்​களும் 2021-ம் ஆண்டு முதல்​முறையாக காகிதம் இல்லா பட்ஜெட்டை தாக்கல் செய்​யும்​போது 1 மணி நேரம் 40 நிமிடங்​களும் உரையை அவர் வாசித்தார். 2020-ம் ஆண்டில் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் அவர் பேசினார்.

திருக்குறளை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர்: ‘‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி’’ என்ற திருக்குறளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது மேற்கோள் காட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும். குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர் என்று வள்ளுவர் கூறுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடைநிலை மக்களின் குரலுக்கும் செவிசாய்க்கிறது. சமச்சீரான வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் தனிநபர் வருமான வரி விகிதத்தில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள். நாட்டில் தொழில் தொடங்க ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வேலைவாய்ப்புகளை பெருக்கவும் முதலீடுகளை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வரிச்சுமைகள் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x