Published : 02 Feb 2025 08:58 AM
Last Updated : 02 Feb 2025 08:58 AM

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம்

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்: நரேந்திர மோடி பிரதமராக உயர்ந்ததில் உத்தர பிரதேசத்தின் பங்கு உள்ளது. ஆனால் நிதியமைச்சரின் உரையில் உ.பி. பற்றி எதுவும் இல்லை. உ.பி. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அதுபற்றிய அறிவிப்பு இல்லை. உ.பி.யில் விவசாயிகளுக்கு இன்னும் சந்தைகள் இல்லை. இளைஞர்களுக்கான பயிற்சி போன்ற குறுகிய கால நடவடிக்கைகள் வேலையின்மை நெருக்கடியைத் தீர்க்காது.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி: நாட்டில் பணவீக்கம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றின் மிகப்பெரிய தாக்கத்தாலும், சாலைகள், தண்ணீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சுமார் 140 கோடி மக்கள் சிரமத்தில் உள்ளனர். மத்திய பட்ஜெட் மூலம் இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசின் பட்ஜெட்டை போலவே பாஜகவின் பட்ஜெட் உள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவால்: நாட்டின் பெரும் பணக்காரர்கள் சிலரின் கடன் தள்ளுபடிக்காக நாட்டின் பெரும் பகுதி பணம் செலவு செய்யப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வந்து, அதில் சேமிக்கப்படும் பணத்தை நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்குச் செலவிட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தேன். ஆனால் அதுபற்றி ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தேன். வருமான வரி, ஜிஎஸ்டி வரி விகிதங்களை பாதியாக குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் செய்யப்படவில்லை.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்: பஞ்சாப் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பிஹாருக்கான அறிவிப்புகள் மட்டுமே உள்ளன. பஞ்சாப் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படவில்லை. பஞ்சாப் தொழில் துறைக்கு எந்த ஒதுக்கீடும் இல்லை.

திரிணமூல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி: பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை. வரவிருக்கும் பிஹார் தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, கடந்த பத்து ஆண்டுகளில் எதுவும் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் இல்லை. இது தூரதிருஷ்டவசமானது.

திமுக எம்.பி. தயாநிதி மாறன்: நாட்டுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட். ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு அளிப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் உரையின் அடுத்த வரியில் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரி என உள்ளது. பிஹார் தேர்தல் வருவதால் அம்மாநிலத்துக்கு பல அறிவிப்புகள் உள்ளன. மீண்டும் பிஹார் மக்களை முட்டாளாக்குகின்றனர்.

பிஆர்எஸ் எம்எல்சி கவிதா: பாஜக சார்பில் 8 எம்.பி.க்களையும் காங்கிரஸ் சார்பில் 8 எம்.பி.க்களையும் தெலங்கானா தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் பூஜ்யம் தான் கிடைத்துள்ளது. தெலங்கானா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x