Published : 01 Feb 2025 06:45 AM
Last Updated : 01 Feb 2025 06:45 AM
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 8-வது முறையாக அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற இருக்கிறார். நாடாளுமன்ற அலுவல்களை ஒளிபரப்பும் சன்சத் தொலைக்காட்சியில் பட்ஜெட் தாக்கல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
மத்திய பட்ஜெட் குறித்து நிதித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: புதிய வரி விகிதத்தில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படலாம். அதோடு புதிதாக 2 வரி பிரிவுகள் சேர்க்கப்படலாம்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மின்னணு சாதனங்களின் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான வரியும் குறைக்கப்படலாம். தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படலாம்.
குறு, சிறு விவசாயிகளுக்கு தற்போது ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவி ரூ.12,000 ஆக அதிகரிக்கப்படலாம். அடல் ஓய்வூதிய திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது ரூ.10,000 ஆக உயர்த்தப்படலாம்.
மத்திய பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த தேசிய வேலைவாய்ப்பு கொள்கை அறிவிக்கப்படலாம். இதன்படி பட்டதாரி இளைஞர்களுக்கு அருகில் உள்ள அரசு அலுவலகங்களில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க ஊக்கம் அளிக்கப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு வழிகாட்டப்படும்.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம். மருத்துவ கருவிகள் இறக்குமதி வரி கணிசமாக குறைக்கப்படலாம்.
நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வரிச் சலுகைகள் அறிவிக்கப்படக்கூடும். தற்போது பெருநகரங்களில் ரூ.45 லட்சம் மதிப்பில் வீடுகளை வாங்குவோருக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த தொகை ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது. சிறிய நகரங்களில் ரூ.50 லட்சம் மதிப்பில் வீடுகள் வாங்குவோருக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படக்கூடும்.
தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகைக்கு ஓர் நிதியாண்டில் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்பிருக்கிறது.
மத்திய நிதியமைச்சகத்தின் அடித்தளத்தில் உள்ள அலுவலகத்தில் சுமார் 100 அலுவலர்கள், ஊழியர்கள் கடந்த 7 நாட்களாக பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்ஜெட் தகவல்கள் வெளியே கசியாமல் இருக்க 100 பேரிடம் இருந்து செல்போன்கள் பெறப்பட்டு உள்ளன. அவர்கள் வீடுகளுக்கு செல்லாமல் அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது மட்டுமே முழுவிவரங்கள் தெரியவரும். இவ்வாறு நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT