Published : 31 Jan 2025 08:36 PM
Last Updated : 31 Jan 2025 08:36 PM

‘நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ - சோனியா கருத்துக்கு பாஜக எதிர்வினை

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் தொடக்க உரை குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜகவினர் இக்கருத்துக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.

பாஜக மூத்த தலைவர் ஜே.பி.நட்டா இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “ஒரு நாட்டின் குடியரசுத் தலைவரை, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இது போன்று பேசுவதை பாஜக சார்பில் கடுமையாகக் கண்டிக்கிறோம். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சோனியா காந்தி பாவம் என்று கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். வேண்டுமென்ற பயன்படுத்தப்பட்ட இதுபோன்ற வார்த்தைகள் காங்கிரஸ் கட்சியின் மேலாதிக்க, ஏழைகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது. குடியரசுத் தலைவர் முர்முவிடமும், இந்திய பழங்குடி சமூக மக்களிடமும், காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இது குறித்து, “சோனியா காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நமது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பலவீனமானவர் அல்ல... அவர் நாட்டுக்கு எண்ணற்ற பணிகளை செய்துள்ளார். அவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது குறித்து, “சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு எதிராகப் பயன்படுத்திய வார்த்தைகளை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?" என்று கூறினார்.

சோனியா சர்ச்சைக் கருத்து: நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரைக்கு பின்பு செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறும்போது, “குடியரசுத் தலைவர், உரையின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை. பாவம்” என்று வருத்தப்பட்டிருந்தார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் உடன் இருந்தனர்.

சோனியா காந்தியின் பதிலைத் தொடர்ந்து, அவரது கருத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சலிப்பானது. திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்கிறார்” என்று தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, குடியரசுத் தலைவர் மாளிகையும் கண்டனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x