Published : 30 Jan 2025 02:02 AM
Last Updated : 30 Jan 2025 02:02 AM

மகா கும்பமேளா கூட்டத்தில் சிக்கிய உறவினர்களை பிடித்து இழுத்தோம்: அனுபவத்தை பகிர்ந்துகொண்ட பக்தர்கள்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.படம்: பிடிஐ

மவுனி அமாவாசையை முன்னிட்டு மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இங்கு மவுனி அமாவாசை தினத்தில் நடைபெறும் ‘அமிர்த ஸ்நானம்’ நிகழ்ச்சிக்கு 10 கோடி பக்தர்கள் வருவார்கள் என முன்பே கூறப்பட்டது. அதன்படியே நேற்று அதிகாலை 1 மணி முதல் பிரயாக் ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டு புனித நீராட சென்றனர். சங்கமம் பகுதியில் புனித நீராட பல படித்துறைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், சங்கமம் முனைப்பகுதி இடத்தில் புனித நீராட பக்தர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் அங்கு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கும்பமேளாவுக்கு வந்த பலர் கூட்டத்தில் காணாமல் போயினர். பின்னால் வந்த கூட்டம் முன்னாள் இருந்தவர்களை தள்ளிக் கொண்டு சங்கமம் முனைப் பகுதியை நோக்கி சென்றது. இதனால் பக்தர்கள் தங்கள் உறவினர்களை தவறவிடாமல் இருக்க ஒருவரையொருவர் பிடித்த இழுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பெண் பக்தர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீஸாரின் உதவியை பக்தர்கள் நாடினர். ஆனால், போலீஸாரால் கூட்ட நெரிசல் பகுதிக்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்க முடியவில்லை. காயம் அடைந்த உறவினரை அரை மணி நேர தாமதத்துக்கு பின்பே மருத்துவமனை கொண்டு சென்றதாக மற்றொரு பக்தர் தெரிவித்தார்.

பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்ததாலும், பின்னால் வந்த பக்தர்கள் தள்ளியதாலும் கூட்ட நெரிசலில் பலர் காயம் அடைந்ததாக கர்நாடகாவில் இருந்து வந்திருந்த பக்தர் ஒருவர் தெரிவித்தார். கூட்ட நெரிசலில் இருந்து ஒவ்வொருவராக சிரமப்பட்டு வெளியேறியதாகவும், எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிய முடியவில்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் தொலைந்து போவதை தவிர்க்க, குடும்பமாக வந்திருந்த பக்தர்கள் தங்களின் ஆடைகளை கயிறாக்கி அதை பிடித்தபடி சங்கமம் பகுதியில் நடந்து சென்றனர்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எக்ஸ் தளத்தில் விடுத்த வேண்டுகோளில், ‘‘கங்கை நதியில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து படித்துறைகளிலும் புனித நீராடலாம், சங்கமம் முனைப் பகுதிக்கு செல்ல பக்தர்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டாம், நிர்வாகத்தினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். . கூட்டத்தில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் ’’ என்றார்.,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x