Published : 29 Jan 2025 07:50 AM
Last Updated : 29 Jan 2025 07:50 AM
பிரயாக்ராஜ்: வட இந்தியாவில் இன்று மவுனி அமாவாசை என்பதால் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.
“புனித நீராடும் சங்கம் காட் பகுதிக்கு அருகே இருந்த தடுப்பு கட்டை உடைந்ததை அடுத்து பக்தர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிசிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் குறித்த சரியான தகவல் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கும்ப மேளாவில் சிறப்பு அதிகாரியாக பணியில் உள்ள அகன்க்ஷா ராணா கூறியுள்ளார். இந்தச் சூழலில், சம்பவம் நடந்த பகுதியில் பக்தர்கள் புனித நீராட தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
வட இந்தியாவில் மக மாதத்தில் வரும் அமாவாசை, மவுனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி மகா கும்பமேளாவில் இன்று (புதன்கிழமை) 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை முன்னிட்டு அம்ரித் கால ஸ்தானம் (புனித நீராடல்) மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ‘திரிவேணி யோகம்’ என்ற வானியல் தினமான இன்று அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கும்பமேளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களத்தில் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி சுமார் 30 பெண்கள் காயமடைந்ததாகவும். அவர்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா விழா தொடங்கியது. அங்கு திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக நாடு முழுவதும் இருந்து பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரயாக்ராஜ் ரயில் நிலையம் மற்றும் அதன் அருகில் 7 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
இந்தச் சூழலில் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி உடனடியாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் பக்தர்கள் புனித நீராட தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT