Published : 29 Jan 2025 01:59 AM
Last Updated : 29 Jan 2025 01:59 AM

மவுனி அமாவாசையை ஒட்டி அலைமோதும் கூட்டம்: மகா கும்பமேளாவில் இன்று 10 கோடி பேர் புனித நீராடுவர்

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மவுனி அமாவாசையை முன்னிட்டு இன்று சுமார் 10 கோடி பேர் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம்: பிடிஐ

மவுனி அமாவாசையை ஒட்டி மகா கும்பமேளாவில் இன்று 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நேற்று மட்டும் 3.90 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா விழா தொடங்கியது. அங்கு திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக நாடு முழுவதும் இருந்து பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரயாக்ராஜ் ரயில் நிலையம் மற்றும் அதன் அருகில் 7 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த ரயில் நிலையங்களில் இருந்து திரிவேணி சங்கமத்துக்கு பக்தர்கள் பெருந்திரளாக செல்கின்றனர்.

சிவில் லைன்ஸ், ஜீரோ சாலை ஆகிய இடங்களில் 2 பேருந்து முனையங்கள் அமைந்துள்ளன. இங்கிருந்தும் பக்தர்கள் பெருந்திரளாக திரிவேணி சங்கமத்துக்கு செல்கின்றனர். பிரயாக்ராஜ் சுற்றுவட்டார பகுதிகளில் 30 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒரே நேரத்தில் 5 லட்சம் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பிரயாக்ராஜில் உள்ள விமான நிலையத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது: மகா கும்பமேளாவின் 16-வது நாளான நேற்று ஒரே நாளில் 3.90 கோடி பேர் புனித நீராடினர். அவர்களையும் சேர்த்து இதுவரை 17.5 கோடி பேர் புனித நீராடி உள்ளனர். வடஇந்தியாவில் மக மாதத்தில் வரும் அமாவாசை, மவுனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி மகா கும்பமேளாவில் இன்று 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமாவாசையை ஒட்டி விமான நிலையம், ரயில், பேருந்து நிலையங்களில் நேற்று முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ள கூடார நகரம், கோபுர நகரத்தில் ஒரே நேரத்தில் 10 லட்சம் பேரை தங்க வைக்க முடியும். இவை முழுமையாக நிரம்பி உள்ளன. பிரயாக்ராஜ் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 42 மிகப்பெரிய ஓட்டல்கள் உள்ளன. அந்த ஓட்டல்களின் அனைத்து அறைகளும் நிரம்பி உள்ளன.

இதுதொடர்பாக உத்தர பிரதேச காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பிரயாக்ராஜில் கூட்ட நெரிசலை தவிர்க்க சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், விமான நிலையத்தில் இருந்து வரும் பக்தர்கள் 12 கி.மீ. தொலைவை நடந்தே கடக்க வேண்டும்.

மவுனி அமாவாசையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தற்போது சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட உணவு கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. ஒரு நேரத்தில் 30,000 பேர் உணவு கூடத்தில் அமர்ந்து சாப்பிட முடியும். சாதாரண நாட்களில் சுமார் 4 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மவுனி அமாவாசையை ஒட்டி லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருப்பதால் உணவு கூடத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

உயர் நீதிமன்றத்தின் அறிவுரைப்படி ஜன. 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் பிரயாக்ராஜில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் பக்தர்களை தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மாநில காவல் துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. தற்போது கூடுதலாக 5,000 வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். திரிவேணி சங்கமத்தில் புனித நீராட சுமார் 13 கி.மீ. தொலைவுக்கு படித்துறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு உத்தர பிரதேச காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x