Published : 27 Jan 2025 11:54 AM
Last Updated : 27 Jan 2025 11:54 AM
புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவில் 572 திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் அளித்துள்ளனர்.
தற்போதுள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இது தொடர்பான திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, பாஜக தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு இந்த மசோதா தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை குழுவின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியதை அடுத்து, திருத்தங்களின் ஒருங்கிணைந்த பட்டியல் விநியோகிக்கப்பட்டது. அதன்படி, 572 திருத்தங்களை மேற்கொள்ள குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவில் திருத்தங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அதேநேரத்தில், திருத்தங்களைச் சமர்ப்பித்த உறுப்பினர்களின் பட்டியலில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை.
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இன்றைய (திங்கட்கிழமை) கூட்டத்தில் உட்பிரிவு வாரியான திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதற்கான கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்தவும், சொத்துக்களை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களைத் தீர்க்கவும் 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தை திருத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT