Published : 27 Jan 2025 04:20 AM
Last Updated : 27 Jan 2025 04:20 AM
பெங்களூரு: கர்நாடகாவில் பெண் ஒருவர் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்காக தனது சிறுநீரகத்தை விற்க நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது இரு மகள்களின் சிறுநீரகங்களையும் விற்க கட்டாயப்படுத்துவதாக புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் மாகடியை சேர்ந்த 46 வயது பெண் ஒருவர் மாகடி காவல் நிலையத்தில் கடந்த 23-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் சோமேஷ்வரா கடந்த 2020-ல் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கினார். 8 மாதங்கள் தவணை செலுத்திய அவர், கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
இதனால் நிதி நிறுவனத்தினர் பணம் கேட்டு எனக்கு நெருக்கடி கொடுத்தனர். அப்போது எங்களுக்கு நீண்ட காலமாக தெரிந்த மாகடி மஞ்சுநாத் (40), “'எனது ஒரு சிறுநீரகத்தை விற்றால் ரூ.2.5 லட்சம் கிடைக்கும். அதன் மூலம் வரும் பணத்தில் கடனை அடைத்துவிடலாம். ஒரு சிறுநீரகத்துடன் ஆரோக்கியமான வாழ முடியும்" என்றார்.
அவரது வழிகாட்டுதலின்படி, 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு யஷ்வந்த்பூர் அருகே தனியார் மருத்துவமனையில் எனது சிறுநீரகம் அகற்றப்பட்டது. அப்போது மஞ்சுநாத் மூலமாக எனக்கு ரூ.2.5 லட்சம் தரப்பட்டது. ஆனால் அதில் ரூ.1.5 லட்சம் மட்டுமே மஞ்சுநாத் எனக்கு கொடுத்தார். அந்தப் பணத்தை வைத்து எனது கடனை அடைத்தேன்.
இந்நிலையில் மஞ்சுநாத் மீண்டும் என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார். பணம் தராவிடில் திருமணமான என் 2 மகள்களின் சிறுநீரகத்தை விற்று கடனை பணம் தருமாறு கட்டாயப்படுத்துகிறார். இதற்கு மறுத்ததால் என்னை தாக்கி, கொல்லப் போவதாக மிரட்டுகிறார். இவ்வாறு அப்பெண் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாகடி போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே 52 வயதான மற்றொரு பெண் தன்னையும் மஞ்சுநாத் இதேபோல் சிறுநீரகத்தை விற்குமாறு மிரட்டியதாக புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் ராம்நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT