Published : 27 Jan 2025 01:10 AM
Last Updated : 27 Jan 2025 01:10 AM
சுக்மா: சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அந்த சிறுமியின் சிகிச்சை, கல்வி மற்றும் திருமண செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள திமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அடுப்பு எரிப்பதற்காக சிறு குச்சிகளை எடுக்க வனப்பகுதிக்கு கடந்த 12-ம் தேதி சென்றார். அப்போது அவர் நக்சலைட்டுகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை தொட்டதால் அது வெடித்தது. இதில் சிறுமியின் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
ராய்ப்பூர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அங்கு பணியாற்றும் மருத்துவர் சுனில் கல்தா என்பவர் சிகிச்சை அளித்தார். லேசர் சிகிச்சை மூலம் சேதம் அடைந்த திசுக்கள் அகற்றப்பட்டு, சிறுமிக்கு செயற்கை தோல் பொருத்தப்பட்டது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய்யை சமீபத்தில் சந்தித்தனர். அப்போது அந்த சிறுமியின் சிகிச்சை, கல்வி மற்றும் திருமண செலவை யாராவது ஏற்க முன்வந்தால் சிறப்பாக இருக்கும் என முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட மருத்துவர் சுனில் கல்தா, சிறுமிக்கான அனைத்து செலவுகளை தானே ஏற்பதாக உறுதியளித்தார். இது குறித்து சுனில் கல்தா கூறுகையில், ‘‘ முதல்வர் விஷ்ணு தியோ சாய்யின் யோசனை எனக்கு பிடித்தது. அந்த சிறுமியின் எதிர்கால செலவுகளை நானே ஏற்பேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT