Published : 25 Jan 2025 01:55 PM
Last Updated : 25 Jan 2025 01:55 PM

மர்ம நோயால் 17 பேர் மரணம்: காஷ்மீரின் ரஜவுரி அரசு மருத்துவர்கள் விடுப்பு ரத்து

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள பதால் என்ற கிராமத்தில் மர்ம நோயால் 17 பேர் உயிரிழந்ததை அடுத்து, ரஜவுரி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ரஜவுரி அரசு மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அமர்ஜீத் சிங் பாட்டியா, நேற்று (ஜன. 24) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கடந்த ஒன்றரை மாதங்களில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, மருத்துவ எச்சரிக்கை நிலைமையைச் சமாளிக்க மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குளிர்கால விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

17 இறப்புகளிலும் பொதுவான காரணி மூளை பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய சுகாதார நிலைமையை எதிர்கொள்ள ஜம்மு-காஷ்மீர் அரசு, மருத்துவ வசதிக்கு உதவுவதற்காக ஜிஎம்சி ரஜோரிக்கு 10 கூடுதல் மருத்துவ மாணவர்களை அனுப்பியுள்ளது.” என தெரிவித்தார்.

மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேசிய அதிகாரிகள், “ஜம்முவில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனையிலும், சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் மூன்று பேரின் உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது. மூன்று சகோதரிகள் உட்பட நான்கு பேர் விமானம் மூலம் ஜம்முவில் உள்ள மருத்துவமனைக்கு ஜன.22 அன்று கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் உட்பட மேலும் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகயாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 24, 2025) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், ரஜவுரியில் உள்ள நர்சிங் கல்லூரி தனிமைப்படுத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளது. ரஜோரி நர்சிங் கல்லூரி தனிமைப்படுத்தல் மையத்தில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்கள் முதல் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்தவர்கள் வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்புடைய பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொலைதூரப் பகுதியான பதால் கிராமம் புதன்கிழமை (ஜனவரி 22, 2025) ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மர்ம மரணங்களைத் தொடர்ந்து அனைத்து பொது மற்றும் தனியார் கூட்டங்களுக்கும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய குழுவும் காவல்துறையும் இறப்புகள் குறித்து தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இறந்தவரின் மாதிரிகளில் சில நியூரோடாக்சின்கள் கண்டறியப்பட்டுள்ளன. காவல்துறையினரால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), குற்றவியல் கோணத்தில் தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விசாரித்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் மத்திய அறிவியல்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டார். அப்போது இந்த விவகாரம் குறித்துப் பேசிய அவர், "ரஜவுரியில் 17 பேர் இறந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையின் முடிவில் அவர்கள் நோய்த்தொற்று, வைரஸ் அல்லது பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க வில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகள் நச்சுப் பொருட்களால் ஏற்பட்டவை என்று தெரிகிறது.

இது எந்தவகையான நச்சுப் பொருட்கள் என்பதை அடையாளம் காண சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதை வேண்டுமென்றே யாராவது செய்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்படி யாராவது செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியரும், தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறையின் தலைவருமான டாக்டர் சுதிர் குப்தா கூறும்போது, “இந்த உயிரிழப்புகளுக்கு என்ன வகையான நச்சுப்பொருள் காரணம் என்பதை அடையாளம் காண விரிவான பரிசோதனை தேவைப்படுகிறது. இதற்கு சில பூச்சிக்கொல்லி அல்லது நச்சு வாயுக்கள் கூட காரணமாக இருந்திருக்கலாம்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x