Published : 25 Jan 2025 10:41 AM
Last Updated : 25 Jan 2025 10:41 AM
வாஷிங்டன்: மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி தஹவ்வூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ராணாவை நாடு கடத்த இந்தியா கோரியுள்ள காரணங்களில் முகாந்தரம் உள்ளதால் அவரை நாடு கடத்த உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர்.மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் போலீஸாரால் உயிரோடு பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தீவிரவாதி தஹவ்வூர் ஹுசைன் ராணா அமெரிக்காவில் கடந்த 2009-ல்பிடிபட்டார். மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து, கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழில் அதிபர் ராணா சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர் தஹவ்வூர் ராணா. அமெரிக்க சிறையில் உள்ள ராணாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த ராஜீய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசும் ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன்று இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
முன்னதாக, ராணா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை தடுக்க கோரி சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கீழமை நீதிமன்றங்களை நாடினார். ஆனால், அவரிக் கோரிக்கையை ஏற்க அவை மறுத்துவிட்டன. இந்த நிலையில், இறுதி முயற்சியாக அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்க கூடாது என தற்போது அமெரிக்க அரசே பதில் மனு தாக்கல் செய்தது.
அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் ராணாவின் நாடு கடத்துவதை தடுக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில், அதன் அடிப்படையில் ராணா நாடு கடத்தப்படுகிறார். ராணா விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT