Published : 25 Jan 2025 06:30 AM
Last Updated : 25 Jan 2025 06:30 AM

வக்பு வாரிய ஜேபிசி கூட்டத்தில் 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாள் முழுவதும் சஸ்பெண்ட்: காரணம் என்ன?

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) கூட்டத்தில் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி வக்பு வாரிய சட்டத்திருத்த மாசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் இரு அவைகளில் இருந்தும் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 31 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இக்குழுவின் நேற்றைய கூட்டத்தில் அமளி ஏற்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த அசதுதீன் ஒவைசி, கல்யாண் பானர்ஜி, ஆ.ராசா, எம்.அப்துல்லா, இம்ரான் மசூத், முகம்மது ஜாவேத், சையத் நசீர் உசேன், நதிமுல் ஹக், அரவிந்த் சாவந்த், மொஹிபுல்லா ஆகிய 10 எம்.பி.க்கள் நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறுகையில், “ஜேபிசி தலைவர் ஜெகதாம்பிகா பால் இன்று திடீரென நிகழ்ச்சி நிரலை மாற்றியுள்ளார். பிரிவு வாரியாக விவாதம் இல்லை என்கிறார். 25-ம் தேதி கூட்டத்தை 27-ம் தேதிக்கு மாற்றியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு அவர் செவிசாய்ப்பதில்லை. ஒரு ஜமீன்தாரியை போல் கூட்டத்தை நடத்துகிறார்" என்றார்.

காங்கிரஸ் எம்.பி. நசீர் உசேன் கூறுகையில், “வக்பு மற்றும் பிற பிரச்சினைகள் குறித்த முந்தைய ஜேசிபி அமர்வுகள் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளன. நாங்களும் அதுபோல் விரிவாக விவாதித்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய விரும்புகிறோம். ஆனால் பாஜகவும் மத்திய அரசும் டெல்லி தேர்தலில் பலன் அடைவதற்காக அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை விரைவுபடுத்துகின்றன” என்றார்.

பாஜக எம்.பி. நிதிகாந்த் துபே கூறுகையில், “ஜம்மு காஷ்மீரின் முழு பிரதிநிதித்துவமும் கேட்கப்படவில்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அழைத்திருக்க வேண்டும் என்று ஒவைசி கூறியதன் அடிப்படையில் அதுபற்றி விவாதிக்க இன்றைய கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் பரிந்துரையால் அது தள்ளிவைக்கப்பட்டது. மிர்வைஸ் முன்னால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபடுகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகின்றனர்" என்றார்.

ஜேபிசி கூட்டம் அமளியில் முடிந்தது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த அக்டோபரில் நடந்த கூட்டத்தில் திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி, பாஜக எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய இடையே மோதல் ஏற்பட்டது. பானர்ஜி ஒரு கண்ணாடி பாட்டிலை உடைத்து, ஜெகதாம்பிகா பால் மீது வீசினார், இந்த செயலில் அவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x