Published : 25 Jan 2025 05:35 AM
Last Updated : 25 Jan 2025 05:35 AM
திருவனந்தபுரம்: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க கேரளாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மன்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்சியார் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கோழிமலை. இங்கு மன்னன் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பழங்காலத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் ஏற்பட்ட போரின்போது தமிழ்நாட்டில் இருந்து கேரள பகுதிக்கு குடியேறியவர்கள். இந்த பழங்குடியின மக்களுக்கு ராஜா உண்டு. ஆனால் ராஜ்ஜியம் இல்லை. தலைநகர் உண்டு.
தற்போதைய மன்னன் பழங்குடியின மக்களின் ராஜாவாக ராமன் ராஜா மன்னன் இருக்கிறார். மன்னன் பழங்குடியின ராஜா ஆர்யன் ராஜா மன்னன் காலமானதை அடுத்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் ராமன் முடிசூடினார். ஆனால், கிரீடம் இருக்காது. நாடு இருக்காது. கேரளாவில் பழங்குடியினத்தை சேர்ந்த ஒரே ராஜா இவர்தான். டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க பழங்குடியினத் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் ராமன் ராஜா மன்னனும் ஒருவர்.
இவரது கிராமத்தில் உள்ள 3,000 மன்னன் பழங்குடியின குடும்பங்களுக்கு ராமன்தான் ராஜா. இந்த பழங்குடியினத்தவர்கள் விவசாயம், விவசாய தினக்கூலிகளாகவே இருக்கிறார்கள். இவர் கிரீடம் அணியாவிட்டால், பொது நிகழ்ச்சிகளில் தலைப்பாகை அணிந்து வருவார். ராமனுடைய வார்த்தைக்கு அவரது இன மக்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். தங்களுடைய ராஜாவாகவே அவரை மதிக்கின்றனர். இவரது தலைநகரம் கோழிமலை கிராமம்தான். இந்நிலையில், ராமன் ராஜா மன்னன், இவரது மனைவி பினுமோல் ஆகியோர் நாளை டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT